SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீராத நோய்களையும் தீர்த்தருளும் திருமகன்

2016-12-21@ 10:06:38

விழுப்புரம்பாண்டிச்சேரி பாதையில் 20வது கி.மீட்டரில் கண்டமங்கலம் ரயில்வேகேட் உள்ளது. அதன் இடது
புறத்தில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது, சின்னபாபு சமுத்திரம். இங்கு மகா சித்தபுருஷரான மகான் ஸ்ரீ படேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் தன் ஜீவ சமாதியிலிருந்து அருள் அலைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் அற்புத ஆற்றல்மிக்க சித்தர் இவர். பல ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்காசிய நாடுகள் மற்றும் பல நாடுகளில் வைத்தியநாதனாக மக்களின் பலதரப்பட்ட நோய்களைத் தீர்த்து இப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

இந்தப் புனிதர் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர். இறைவனின் பேராற்றலை உணர்ந்த பிறகு சாதி, மதம், இனம் அறவே மறைந்து விடும். ‘படே’ என்றால் பெரிய என்று பொருள். இத்தகைய உயர்ந்த நிலையில் உத்தமராக விளங்கியதால் மக்கள் இவரை ‘படே சாயபு’ என்று அழைக்கலாயினர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷர் இவர். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.   

இமயமலையின் அடிவாரத்தில் 2000 அடிக்குக் கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளி படாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வரர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவருடைய சமாதிக்கு அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அற்புத விநாயகர் சிலை அளவில்லா அருளை வாரி வழங்கி வருகிறது.

மகான் படேசாகிப், சின்னபாபுசமுத்திரம் என்ற சிற்றூரில் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. அவர் யாரிடமும் பேசியதில்லை. மௌனத்திலேயே நிலைத்து மௌனத்திலேயே ஆழ்ந்தார். மகான் மௌனத்தை அடைந்துவிட்ட பிறகு அவருக்கு எண்ணங்கள் அற்று விட்டன. மனம் மறைந்துவிட்டது. இவ்வுலகப் பற்று, உலக இயக்கம் யாவற்றிலிருந்தும் விலகி, முழு ஆன்மிக வாழ்வுக்கு மாறிவிட்டது.

இவர் புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த திருக்கனூரில் தங்கியிருந்தார். அங்கிருந்து சின்னபாபுசமுத்திரத்திற்கு அவ்வப்போது சென்று வருவதுண்டு. இவருக்கு ராப்பகல் கிடையாது. ராப்பகல் அற்ற இடத்தில் நினைவை  நிறுத்த மூன்று சுதந்திரத்தை விட்டார். முதலாவதாக தேக சுதந்திரத்தை விலக்கினார். இரண்டாவதாக போக சுதந்திரத்தை நீக்கினார். மூன்றாவதாக ஜீவ சுதந்திரத்தை விட்டார். தன்னுள்ளே தன்னைக் கண்டார். ஆண்டுகள் ஓடின.

ஆத்மசக்தி பெருகியது. சித்துகள் கைவரப் பெற்றார். கருணையே வடிவமானார். பாமர மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள். தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறையை மகானிடம் கூறுவார்கள். சற்று நேரம் கழித்து தலையசைப்பார். நோய் குணமாகிவிடும். சிலரை அங்குள்ள ஒரு மரத்தைச் சுற்றும்படி ஜாடை காட்டுவார். அவர்கள் சுற்றியபின் நோய் குணமாகி ஓடியேவிடும். மகான் படேசாகிப் சுவாமி வட திசையில் இருந்து ராமரெட்டிக்குளம் சென்றார். அவர் அந்த ஊரைச் சுற்றிப் பார்த்தார்.

அங்கு ஒரு பெரிய குளமும் அதனைச் சுற்றி அடர்ந்த பெரிய காடும் தென்பட்டன. அதன்பிறகு அந்த காட்டுப் பகுதியில் தங்க ஆம்பித்தார். ஆத்மஞானி ஒருவர் தங்கி இருப்பதை ஊர்மக்கள் அறிந்தனர். அவர்களால் மகானின் சக்தியை கண்டறிய முடியவில்லை. கை, கால் ஊனமுற்ற இளைஞன் ஒருவன் சுவாமியை வந்து வணங்கினான். சுவாமிகளுடன் தங்கினான். தினமும் மகானை வணங்கி வந்தான். சில நாட்களில் அவனுடைய ஊனம் மறைந்து உடல் குணமானது. நன்றாக நடக்கவும், கைகளால் நன்றாக பணி செய்யவும் முடிந்தது.

மக்கள் சுவாமிகளின் பேரருளைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அவர்கள் அடிக்கடி சுவாமியை வந்து வணங்க ஆரம்பித்தனர். மக்களின் குறைகளை கண்டறிந்து அவரவருக்குள்ள நோய்களை குணமாக்கி அருள்மழை பொழிந்தார் மகான். காட்டுப் பகுதியிலுள்ள பச்சிலைகளைப் பறித்துக் கொடுப்பார். விபூதியை அள்ளிக் கொடுப்பார். நோயாளியின் சிரசில் கை வைத்து நோயின் கொடுமையைக் குறைப்பார். நோய் உண்டாகும் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து தனது கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து அழுத்துவார். நோயாளி துடிப்பார்.

சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல பறந்தோடிவிடும். தன்னுள்ளே பொதிந்து கிடக்கும் அளவிடமுடியாத பெரும் இறை சக்தியினால் அவர்களுடைய தீய வினைகளினால் விளைந்த நோயை விரட்டக்கூடிய தன்மை பெற்றவர் படேசாகிப் மகான். ஒருநாள் படேசாகிப் குழந்தைகளை அழைத்து ஒரு பெரிய குழியை தோண்டச் செய்தார். அதனுள் தான் இறங்கியவுடன் மண்கொண்டு மூடச் செய்தார். குழந்தைகளும் விளையாட்டாக எண்ணி மூடினார்கள். ஒரு சித்த புருஷர் ஜீவ சமாதி கொள்ள இது இறைவனின் திருவிளையாடல் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

நெடுநேரமாகியும் குழியிலிருந்து சப்தம் கேட்காமையால் குழந்தைகள் அழத் தொடங்கினார்கள். அப்போது குழியிலிருந்து படேசாகிப்பின் கரம் மட்டும் வெளியேவர அவர் கையில் பல வண்ணங்களில் மிட்டாய்கள் இருந்தன. குழந்தைகள் மிட்டாய்களை எடுத்துக்கொண்டு குதூகலமாக ஓடிச்சென்று ஊர் மக்களுக்குச் சொல்ல எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். இவ்வாறாக படேசாகிப் சின்னபாபு சமுத்திரத்தில் கி.பி. 1868 பிப்ரவரி மாதம் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தில் சமாதியடைந்தார். இவரின் குருபூஜை திருநாள் பிரதி வருடம் மாசி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளாகும்.

ஜீவ சமாதி எண்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மகானின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. சமாதியின் முன்பு அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. காற்றிலும் மழையிலும் கூட அணைவதே இல்லை.
மக்கள் சுற்றி வருவதற்கு விசாலமான இடம் உள்ளது. நிழல் தரும் மரங்கள் உண்டு. அவரின் மறைவுக்குப் பின் மகானின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் சமாதிக்குத் தினமும் சென்று வருகிறார்கள். பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் சமாதிக்குச் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.

மக்கள் தங்கள் குறைகளைச் சமாதியின் முன் நின்று மனம் விட்டுச் சொல்லுகிறார்கள். கொடிய தொற்று மற்றும் தீராத நோய்களால்  அவதியுறுவோர் படேசாகிப் ஜீவ சமாதியை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்து, இயன்ற அளவு அன்னதானம், நீர் மோர், பிஸ்கெட், பழ வகைகளை தானம் செய்தால் உத்தமமான பலன்களைப் பெறலாம். தாமரை இலையின் பின்பக்கம் அன்னம் வைத்து தானம் செய்வது கூடுதலான பலனைத் தரும்.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்