SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனிதராய் வந்துதித்த மாதவன்

2016-12-13@ 12:31:13

கேட்டிருந்த வங்கிக் கடன் நிச்சயமாக இன்று கிடைத்துவிடும் என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்தான் பாஸ்கர். “சார் நீங்க போனவாரமே எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிச்சுட்டீங்க, அதனால ஒண்ணும் கவலைப்பட வேணாம்.
நாளைக்கு சீனியர் மேனேஜர் கூட ஒரு சின்ன இன்ட்ராக்க்ஷன், தட்ஸ்ஆல். நீங்க கேட்ட ஐந்து லட்ச ரூபாய், உங்க அக்கவுண்ட்ல டெபாசிட் ஆய்டும்...” சீனியர் கிளர்க் நேற்றே சொல்லியிருந்தார். பாஸ்கர் கம்ப்யூட்டர் சயின்ஸில் மாஸ்டர் டிகிரி முடித்து 5 வருடம் ஆகிவிட்டது.

“சொந்தக்கால்ல நிக்கணும் மச்சி. யார்கிட்டயும் போய் வேலை கேட்டு நிக்கமாட்டேன்,” என்று தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். கல்லூரியில் படிக்கும்போது நடந்த பல்வேறு அறிவியல் கண்காட்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளியவன் பாஸ்கர். ‘மாப்ள! அப்துல்கலாமுக்கு அடுத்தது நீதாண்டா விஞ்ஞானி! இந்த மாநாட்டுக்கு உன்னோட சேவை அவசியம் தேவை’ என்று சக மாணவர்கள் பாஸ்கரை கலாய்ப்பார்கள்.

சின்ன சின்ன நுட்பங்களை வைத்து புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகளை முன்வைத்து அசத்திக்கொண்டே இருந்தான் பாஸ்கர். கேம்பஸ் இன்டர்வியூவில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தும் அதையெல்லாம் உதறிவிட்டு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று உறுதியாக நின்றான். ஆனாலும் இவனுடைய முயற்சிக்கு சோதனைகள்தான் அதிகம் ஏற்பட்டன. பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான ப்ராஜக்டைத் தயாரித்து வைத்துக்கொண்டு ஐந்து வருடங்களாக எல்லா வங்கிப் படிகளையும் ஏறி இறங்கி விட்டான்.

ஒவ்வொரு வங்கியிலும் அப்ளிகேஷன் போடுவதில் தொடங்கி இன்டர்வியூவரை முன்னேறிவிடுவான். இதோ கிடைத்துவிடும், அதோ கிடைத்துவிடும் என்பார்கள். கடைசியில் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழித்து விடுவார்கள். “ஸாரி சார். எங்க டார்கெட் முடிஞ்சிடுச்சி...” “உங்க ப்ராஜக்ட் ஏரியா பஜார் ப்ராஞ்ச்ல வருது சார். அங்க மூவ் பண்ணுங்க..” “அசையா சொத்து செக்யூரிட்டி தரணும் சார்... இப்படிப் பேசிப்பேசியே அனுப்பிவிட்டதில் நொந்து போயிருந்தான் பாஸ்கர். ஆனால், இந்த முறை என்னவோ தெரியவில்லை, ஆரம்பத்தில் இருந்தே கிரீன்சிக்னல் கிடைத்துக்கொண்டே இருந்தது.

‘இந்த ஒரு பேங்க்தான் இதுவரை முயற்சிக்காத பேங்க். அதையும் ஏன் விடணும், அப்ளிகேஷன் போட்டுத்தான் பார்த்துடுவோம்,’ என்று அவநம்பிக்கை முயற்சியாக விண்ணப்பித்திருந்தான். ‘‘இந்தாடா பாஸ்கர், வேணுகோபாலசுவாமி பிரசாதம். உனக்கு லோன் கிடைக்கணும்னு வேண்டிகிட்டு அர்ச்சனை பண்ணிட்டு வந்திருக்கேன்...’’ இவன் அப்ளிகேஷன் எழுதி முடிப்பதற்கும், அம்மா பிரசாதம் கொண்டு வந்து தருவதற்கும் சரியாக இருந்தது.

அம்மா கொடுத்த குங்குமத்தை எடுத்து ‘வேணுகோபாலா... வேணுகோபாலா... வேணுகோபாலா...’ என்று மூன்று முறை சொல்லி, விண்ணப்பத்தின் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டான்.‘‘வேணுகோபால ஸ்வாமி பத்தி உனக்குத் தெரியாதுடா, வேண்டியதை வேண்டியது போலவே தரும் சாமிடா! கோயிலுக்குப் போய்ப் பாரு.. எவ்வளவு பேரு கூட்டம் கூட்டமா வந்து செல்லமா, ‘வேணுசாமி.. வேணுசாமி...’ ன்னு வேண்டிக்கிறாங்க...’’ அம்மா ஆசீர்வாதமாய் சொன்னாள்.

அம்மா சொன்னது மாதிரியே அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்தன. அப்ளிகேஷன் போட்ட ஒரு வாரத்திலேயே முதல் கட்ட இன்டர்வியூவுக்கு லெட்டர் வந்துவிட்டது. தன்னுடைய தொழில் திட்டங்களை, தயாரிப்பாளருக்கு கதை சொல்லும் அறிமுக இயக்குநர் போல சரியான நீள அகலங்களோடு விவரித்தான். பாஸ்கர் சொல்ல சொல்ல ஆச்சரியமாய் கேட்டுக்கொண்டிருந்தார் மானேஜர். அட்டெண்டர் வந்து இருவருக்கும் காபி வைத்து விட்டுப் போனான்.

‘‘பிரமாதம் பாஸ்கர் உங்க ப்ராஜக்ட் நிச்சயம் ஜெயிக்கும்,’’ என்ற மானேஜர், ‘ஹைலி ரெகமண்டட்’ அவன் கண் எதிரிலேயே எழுதி கையெழுத்துப் போட்டார்.‘‘ஏன் மத்த பேங்க்ல இந்த ப்ராஜக்டை ரிஜக்ட் பண்ணாங்கன்னு தெரியல பாஸ்கர்! உங்க ப்ராஜக்டை நீங்க ப்ரசன்ட் பண்ணின விதம் நல்லா இருந்தது. அதற்காகவே சேங்க்ஷன் பண்ணலாம். இதுல என்னோட டூட்டி முடிஞ்சது. சீனியர் மேனேஜர் இன்னொரு நாள் உங்களை பர்சனலா மீட் பண்ணுவார். இதே மாதிரி அட்சரம் பிசகாம சொல்லிடுங்க. அவர் அபிப்ராயம் இதில் ரொம்ப முக்கியம்.

விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.’’ சீனியர் மேனேஜர் ரொம்ப நாள் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த வாரத்திலேயே அவரிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. “ஷார்ப்பா பதினொரு மணிக்கு அவர் கேபின்ல இருக்கணும்..” பேங்கிலிருந்து அலைபேசியில் அழைத்து அட்டெண்டர் சொல்லியிருந்தார். அம்மாதான் நிறைய அறிவுரையும், ஊக்கமும் தந்தாள். “பாஸ்கர், கவலைப்படாத. வேணுகோபாலசாமிகிட்டே போய் நல்லா வேண்டிகிட்டு, சாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணு.

லோன் கிடைச்ச பிறகு ஒரு அபிஷேகம் பண்றேன்னு வேண்டிக்க. நிச்சயமா வேணுகோபாலசாமி நல்ல வழிகாட்டுவார். வேணுகோபாலசாமி நம்ம கண் முன்னாடி நிக்கற தெய்வம்ப்பா! அப்ளிகேஷன் போட்ட ஒரு மாசத்துக்குள்ள காரியம் கைகூடி வந்திருக்கு பாத்தியா..!’’அம்மா சொன்னபடியே அதிகாலையிலேயே, துளசிமாலை குங்குமம் சகிதமாக வேணுகோபாலசாமி கோயிலுக்குப் போய்விட்டான் பாஸ்கர். பஞ்ச தீப தரிசனம் பார்த்தது மனசுக்கு இதமாக இருந்தது.“வேணுகோபால சாமியை வேண்டிவந்தவா... யாரும் வீண் போவதில்ல... உங்களுக்கு சீக்கிரமே பெருமாள் நல்ல வழி காட்டுவார்...”  பிரசாதத்தை நீட்டியபடியே பட்டாச்சார்யார் சொன்னார்.

சீனியர் மேனேஜர் கேபினில் நுழைந்து அவருக்கு வணக்கம் சொன்னபோது, அவர் காபி சாப்பிட்டபடியே, பதில் வணக்கமாகத் தலையசைத்தார். ப்ராஜக்ட் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே பாஸ்கர் சொல்வதைக் கேட்டார். பிறகு, ‘‘எல்லாம் சரிதான் பாஸ்கர், எங்க ப்ராஞ்சைப் பொறுத்தவரைக்கும் பத்துலட்சம் என்பது ஓவர் லிமிட். நான் வேணா இந்த அப்ளிகேஷனை மெயின் ப்ராஞ்சுக்கு அனுப்பிடறேன். நீங்க அங்கே மூவ் பண்ணுங்க.. அதுதான் சரியாக இருக்கும்...’’ என்று சொன்னபடி, ஃபைலை மூடி இவன் கையில் கொடுத்துவிட்டு, இவன் பதிலுக்குக் காத்திருக்காமல் அட்டெண்டரை வரச்சொல்லி பெல்லை அழுத்தினார்.

முகம் முழுவதும் வெளிறிப் போய்விட்டது பாஸ்கருக்கு. கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவான் போல் இருந்தது. அவசர அவசரமாக வங்கியை விட்டு வெளியேறினான். “சார், ஒரு நிமிஷம்..’’ என்றபடி அட்டெண்டர் பின்னாலேயே ஓடிவந்தான். “நான் இந்த பேங்க் அட்டெண்டர். எல்லாத்தையும் பாத்துகிட்டுத்தான் இருந்தேன். கடைசியில லோன் இல்லைன்னு சொல்லிட்டாங்க. கேட்கவே கஷ்டமா இருக்கு சார். நான் ஒரு யோசனை சொல்லட்டா...?’’
“சொல்லுங்க சார். நீங்க லோன் அரேஞ்ச் பண்ணி தருவீங்களா? மேனேஜருக்குஎதாவது கமிஷன் கொடுக்கணுமா?’’ ‘‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார். நீங்க சொன்ன ஐடியா ரொம்ப நல்லா இருந்தது.  

இதைவிட சப்பையான ஐடியாவுக்கு எல்லாம் லோன் கொடுத்திருக்காங்க சார். உங்க ப்ராஜக்ட் ரொம்ப அருமையான சப்ஜெக்ட் சார். வொர்க் அவுட் பண்ணினா நிச்சயமா கோடி கோடியா குவிக்கலாம்...’’“ரொம்ப சந்தோஷம். நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே...” பாஸ்கர் வேதனையுடன் பதிலளித்தான்.‘‘உங்களோட இந்த ஐடியாவை ஃபேஸ் புக்ல போடுங்க சார். நிச்சயமாக ஸ்பான்சர் கிடைப்பாங்க. உங்களுக்குத் தேவையான தொகையை வெளிநாட்டு நிறுவனம்கூட ஸ்பான்சர் பண்ண வாய்ப்பிருக்கு சார்...’’ ‘ச்சே! நமக்கு இந்த யோசனை வராம போயிடுச்சே,’ என்று மனசுக்குள் முட்டிக்கொண்டான் பாஸ்கர்.

அன்றைய தினமே தனது ப்ராஜக்ட் ஐடியாவை முகநூலில் பதிவிட்டான். ஆனாலும் லோன் கிடைக்காத வருத்தம் அவன் முகத்தில் அப்பிக் கிடந்தது.“கவலைப்படாத பாஸ்கர், நிச்சயமா அந்த வேணுகோபாலசாமி உனக்கு நல்ல வழி காட்டுவார். இது இல்லன்னா, வேற ஐடியா உனக்குத் தோணும்,” அம்மா ஆறுதல் சொன்னாள். அம்மா சொன்னது போல அந்த ஆச்சரியம் அடுத்த இரண்டு நாட்களில் நடந்தது. இவனுடைய முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு பலர் உதவி செய்வதாக பதில் கொடுத்திருந்தார்கள்.

சிலர் முகவரி விசாரித்துக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டார்கள். “பாஸ்கர், என் பேரு பிரகாஷ். ஃபேஸ் புக்ல உங்க ப்ராஜக்டோட ஒன்லைன்தான் படிச்சேன், பிரமாதம். எனக்கு நம்பிக்கை இருக்கு. நிச்சயமா சக்சஸ் ஆகும். உங்க ப்ரோஃபைல் பாத்தேன். எனக்கு உங்க மேலேயும் நல்ல நம்பிக்கை இருக்கு. அஞ்சு வருஷமா லோனுக்காக அலைஞ்சதையும் போட்டுருந்தீங்க. இனிமே அஞ்சு நிமிஷம் கூட லேட் பண்ணக்கூடாது...’’ சொன்னவர் கட்டு கட்டாக பணத்தை எடுத்து பாஸ்கர் முன் வைத்தார். ‘‘அப்ராட்ல பல வருஷம் குப்பை கொட்டிருக்கேன்.

நம்ம நாட்டுக்காக ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சப்பத்தான் உங்க ஃபேஸ்புக் கண்ல பட்டது. உடனே கிளம்பி வந்துட்டேன். அவ்வளவும் ஒயிட் மணி பாஸ்கர். நீங்க தாராளமா, தைரியமா உங்க தொழிலை ஆரம்பிக்கலாம்.” கணபதி பூஜையுடன் கம்பெனியை ஆரம்பித்தான் பாஸ்கர். வந்திருந்த அத்தனை பேருமே தன்னை வாழ்த்திப் பேசியது பெருமையாக இருந்தது.“எந்த பேங்க்ல போய் நின்னாலும் உனக்கு இனிமே லோன் கொடுப்பாங்கப்பா, ஜமாய்க்கலாம்,” பழைய நண்பன் சொன்னபோதுதான் ஒரு விஷயம் பொறி தட்டியது பாஸ்கருக்கு.

இந்த யோசனையை முகநூலில் போடச்சொன்ன பேங்க் அட்டெண்டருக்கு நன்றி சொல்லவில்லையே! பைக்கை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் பறந்தான் பாஸ்கர். அட்டெண்டர் டீ தம்ளரோடு வெளியே வந்து கொண்டிருந்தான். “வாங்க பாஸ்கர் சார்,  மேனேஜரைப் பார்க்கணுமா?” என்று கேட்டான்.‘‘இல்ல சார், உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.’’ ‘‘என்னைப் பார்க்கவா? என்ன விஷயம் சார்?’’வழியில் வாங்கி வந்திருந்த ஸ்வீட் பெட்டியை அவர் கையில் திணித்தான் பாஸ்கர்.

‘‘நீங்க சொன்ன யோசனைப்படி என்னுடைய ப்ராஜக்டை ஃபேஸ் புக்ல போட்டேன், உடனே சக்சஸ் ஆயிடுச்சு சார்! பிரகாஷ்னு ஒருத்தர் ஸ்பான்சர் பண்ணிருக்கார். இன்னைக்குக் காலைல கணபதி பூஜையோடு கம்பெனி தொடங்கிட்டோம். நீங்கதான் சார் நல்ல ஐடியா சொன்னீங்க, ரொம்ப தேங்க்ஸ்”

அட்டெண்டர் சந்தோஷப் புன்னகையோடு சொன்னான்: “வாழ்த்துகள் பாஸ்கர்... நல்லா வருவீங்க...” ‘‘அன்னைக்கு அவசரத்துல உங்க பேரைக்கூட கேட்காம போய்ட்டேன் சார்... உங்க பேர் என்ன...?’’ ‘‘வேணுகோபாலஸ்வாமி... என்னை எல்லோரும் வேணுசாமி.. வேணுசாமி...ன்னு கூப்பிடுவாங்க.’’அன்று பஞ்சமுக தரிசனம் பார்த்து சிலிர்த்த அதே வேணுகோபால ஸ்வாமி கண் முன்வந்து நிற்க, அட்டெண்டரைப் பார்த்து இரண்டு கரங்களையும் தன்னை அறியாமல் குவித்து, கண்களில் நீர்பெருக்கினான் பாஸ்கர்.                     

ஆதலையூர் சூரியகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்