SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்திரத்தால் பெற்ற பழம் : செண்பகபுரம்

2016-09-03@ 10:46:02

நாரதர் நடத்தி வைத்த கலகம் அது. ஒரு பழத்தைக் கொண்டு வந்து கயிலைநாதனிடமும், உமையாளிடமும் கொடுத்த அவர், அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஒரு பழத்தைப் போய் துண்டுகளாகப் பங்கிட்டு விநாயகனுக்கும், முருகனுக்கும் கொடுப்பானேன் என்று நினைத்த இறைவன், அதை யாருக்குக் கொடுப்பது என்று யோசித்தார். நாரதரிடமே யோசனை கேட்டார். நாரதரோ வெகு எளிதாக, ‘இந்த உலகை ஒரு முறை சுற்றிவிட்டு யார் முதலில் வருகிறாரோ அவருக்கே கொடுக்கலாம்’ என்று ஒரு பந்தயத் திட்டத்தை அறிவித்தார். திருவிளையாடல் ஈசன், புன்னகையுடன் அதற்கு ஒப்புதல் அளித்தார். உடனே முருகன் தன் மயில் மீதேறி உலகைச் சுற்றிவர புறப்பட, விநாயகர் சாமர்த்தியமாகத் தன் பெற்றோரையே சுற்றி வந்து ‘பெற்றோரே உலகம்’ என்பதாகிய தத்துவ அடிப்படையில் பழத்தை வென்றார். இதையறிந்த முருகன் உடனே கோபித்துக் கொண்டு பழனி மலை மீது கோவணாண்டியாக கோயில் கொண்டார்.

இந்தக் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அப்புறம் நடந்ததென்ன? தம்பி கோபித்துக் கொண்டு போய்விட்டதைக் கண்ட விநாயகர் மனம் வருந்தினார். தன்னுடைய செயலால் முருகன் ஏமாற்றப்பட்டுவிட்டானோ? போட்டி விதியைத் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டதால் ஏற்பட்ட வெற்றி நியாயமானதுதானா? அவருக்கு மனசு விண்டுபோய்விட்டது. அவரும் கயிலையைவிட்டு வெளியே போய்விட்டார். இதற்கிடையில் முருகனை சமாதானப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற முடியாமல் திரும்பிய ஈசன், விநாயகரும் வெளியேறிவிட்டதை  அறிந்து மனம் வருந்தினார். உடனே, பார்வதியுடன் போய் தேடிப் பார்க்க, ஒரு காட்டில் விநாயகர் நிஷ்டையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவரிடம் போய், “ஏற்கெனவே முருகன் கோபித்துக்கொண்டு போனதில் நாங்கள் வருத்தமாக இருக்கிறோம். உனக்கும் ஏன் கோபம், ஏன்  இந்தத் தனிமை? வா, எங்களுடன் வந்துவிடு” என்று கேட்டுக் கொண்டார் ஈசன். ஆனால், விநாயகரோ, “ஐயனே எனக்கு யார் மீதும் கோபம் இல்லை.

சிறு தந்திரத்தால் தம்பிக்கு அந்தப் பழம் கிடைக்காதபடி செய்துவிட்ட குற்ற உணர்வுதான் என்னை வருத்துகிறது. அது மட்டுமல்ல, என்னுடன் சேர்ந்துகொண்டு நீங்களும் எனக்கு சாதகமாகவும் தனக்கு விரோதமாகவும் நடந்துகொண்டுவிட்டதாக முருகனை நினைக்க வைத்துவிட்டதும் என் உள்ளத்தை உறுத்துகிறது. இந்த மனவேதனையிலிருந்து நான் விடுபட சில நாட்கள் ஆகும். அதுவரை என்னை இப்படியே யோக நிலையில் இருக்க விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே ஆசீர்வதித்த ஈசனும், அன்னையும், “தவம் இயற்றுவதால் உனக்கு மன ஆறுதல் கிடைக்குமானால், உன் தவத்திற்கு உதவி செய்வதில் எங்களுக்கும் பெருமையே.  எனவே, உன் தவத்திற்கு வலிமை சேர்க்க, நீ இருக்குமிடத்தை தேவர்களோ, அசுரர்களோ நெருங்கி வரமுடியாமல் நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஸ்வரூபமாக உன்னைச் சுற்றி காத்து நிற்போம்.

நீ தவம் புரியும் செண்பக மரங்கள் நிறைந்த இந்த  இடம் இனி ‘செண்பகபுரம்’ என்ற பெயரால் விளங்கும். தவம் புரியும் முழு முதற் கடவுளான நீ ‘ஆதி கும்பேஸ்வரர்’ என ஆராதிக்கப்படுவாய். செயலுக்கு வருந்தி தவம் இருப்பதால், உன்னை வந்து தரிசிப்பவர்களும் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளிலிருந்து மன்னிக்கப் படுவார்கள்” என்று அருளினார்கள். இதற்குச் சான்றாக, செண்பகபுரம் கிராமத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஐந்து புராதன சிவ ஸ்தலங்கள் இன்றும் இருக்கின்றன. அவை: 1. வண்டலூர்  - வடகிழக்கு - ஈசானம் - சிவகாமி அம்பாள் சமேத திருமூலநாத ஸ்வாமி.

2. மோகனூர் - கிழக்கு - தத்புருஷம்  -  மங்களநாயகி அம்பாள் சமேத ஆதி கும்பேஸ்வர ஸ்வாமி.
3. சிங்கமங்களம் - தெற்கு - அகோரம் - சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிவபுரீஸ்வர ஸ்வாமி.
4. கிள்ளுகுடி - மேற்கு - சத்யோஜாதம் - பெரிய நாயகி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வர ஸ்வாமி.
5. அணக்குடி - வடக்கு -  வாமதேவம் - சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத ஸ்வாமி.

இந்த வட்டத்திற்குள் விஷ்ணு, சாஸ்தா, அம்மன் போன்ற வேறு எந்த மூர்த்திக்கும் கோயில் ஏற்படவில்லை. விநாயகரே இங்கு ஏகபோகமாக தனிமை கொலுவீற்றிருக்கிறார். ஆதி கும்பேஸ்வரப் பிள்ளையார் திருக்கோயில் திருவாரூருக்கு தென்கிழக்கில், இருபது மைல் தொலைவில், செண்பகபுரம் என்னும் கிராமத்தில் பன்னெடுங்காலமாக விளங்கி வருகிறது. தற்சமயம் இது சிறு கிராமமாக இருந்தாலும் முற்காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்கியது. ஆனால், காலப்போக்கில் இயற்கை சீற்றத்தாலும், பல அரசர்களின் படையெடுப்புகளாலும் கிராமத்தின் பல பகுதிகள் அழிந்து போய்விட்டன. இதை இப்போதும் உள்ள சான்றுகளிலிருந்து அறிய முடிகிறது. சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்த சுந்தர பாண்டியன் இங்கேதான் தன் படைக்கலன்களுடன் முகாமிட்டிருந்தான் என்பதற்கு ஆதாரமாக செண்பகபுரத்திற்கு அருகில், ஒரு கிராமம் ‘சுந்தர பாண்டியம்’ என்ற பெயரில் உள்ளது.

அந்த பாண்டிய மன்னன் இங்கு இருந்த காலத்தில் ஆதி கும்பேஸ்வரப் பிள்ளையாரை தரிசனம் செய்ததாகவும் அதன் ஞாபகமாக தன் சந்ததியினருக்கு செண்பக பாண்டியன், செண்பக தேவி என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்ததாகவும் அறியப்படுகிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் இப்பகுதிகளுக்கு வந்திருப்பதற்குச் சான்றாக, சில பாடல்களும் கிடைத்துள்ளன. செண்பகபுரத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரப் பிள்ளையாரின் இத்துணைச் சிறப்புகளையும் இங்கு பிற்காலத்தில் தோன்றிய சீரிய பக்தர்கள் சென்னையில் இருந்த ஆங்கிலேய கவர்னரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதும், அதன் அடிப்படையில் எல்லா விவரங்களையும் ஆய்ந்தறிந்து, ஆங்கிலேய கவர்னர், இனாம் கமிஷனர் மூலம் 24-6-1864 தேதியிட்ட 232 எண் ஆணையைப் பிறப்பித்து, ஆதி கும்பேஸ்வரப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள 32 சென்ட் நிலத்தைப் பிள்ளையாருக்கு வரி விலக்குடன் கொடுத்து உத்தரவிட்டிருப்பதும் இந்த ஆலயத்தின் பழமையைப் பறை சாற்றும் சான்று.

அண்ணாமலைப் பரதேசி என்ற ஒரு ஏழை யாசகர் 1894ல் இந்தக் கோயிலை அடுத்துள்ள ஒன்றரை ஏக்கர் நெல் விளையும் நிலத்தை வாங்கி ஆதி கும்பேஸ்வரப் பிள்ளையார் பெயரில் கிரய சாஸனம் செய்து, அப்போது கோயில் பூஜை செய்து வந்த 28 வயதுள்ள சுப்பிரமணியக் குருக்கள் வசம் ஒப்படைத்தார். வெள்ளிக் கிழமைகளில் விசேஷ பூஜை செய்து, பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் விநியோகம் செய்யும்படி தன் விருப்பத்தை அந்த கிரய சாஸனத்தில் குறிப்பிட்டு, நாகப்பட்டினம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார். ‘பரதேசிக் கட்டளை’ என்ற பெயரில் அந்த பக்தரின் விருப்பம் இன்றளவும் சுப்பிரமணியக் குருக்களின் சந்ததியினரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. செண்பகபுரத்தில் வாழ்ந்து வந்த திரு. து.ப. சொக்கலிங்கம் பிள்ளை (1880 -1920) என்ற பெரும் செல்வந்தர் இந்தக்  கோயில்  தர்மகர்த்தாவாக இருந்து, கோயில் பூஜை செலவுகளை ஏற்று செய்து வந்ததுடன், தனக்குப் பிறகும் இந்த கைங்கர்யம் தொடர வேண்டுமென்று உயில் எழுதி வைத்திருக்கிறார்.

அதன்படி நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவர் சந்ததியினர் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து, கோயில் பூஜை  செலவுகளை ஏற்று செய்துகொண்டு வருகிறார்கள்.
படையெடுப்புகளால் சிதிலமடைந்த  இக்கோயில் கி.பி. 1800களில் ஓடுகளால் வேயப்பட்ட கூரையுடன் வீடு போன்ற அமைப்பில் கிராம வாசிகளால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. மீண்டும் 1950ல் அதே அமைப்பில் தர்மகர்த்தாக்களால் கட்டப்பட்டது. இதுவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. செண்பகபுரத்தில் வாழ்ந்தவரும் ஆதி கும்பேஸ்வரப் பிள்ளையாரிடம் மிகுந்த பக்தி கொண்டவருமான சா.வெ.நாராயணசாமி அய்யர் (1896-1975) அவர்களின் சந்ததியினர், ஊர் மக்கள் மற்றும் தர்மகர்த்தாக்கள் உதவியுடன் புதிய கோயில் கட்டும்  பணியினை 1996ல் மேற்கொண்டனர். ஆகம சாஸ்திர விற்பன்னர்களான சிவாச்சாரியார்களின் ஆலோசனையுடன் கைதேர்ந்த ஸ்தபதியைக் கொண்டு கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம் உள்ளிட்ட அழகான கோயிலைக் கட்டி, 9-9-1996 அன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்வித்தனர்.

மீண்டும் பத்து ஆண்டுகளுக்குள் அவர்களே 1000 சதுர அடியில் மகா மண்டபம் கட்டி 28-6-2006ல் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்வித்தனர். ஆதி கும்பேஸ்வரப் பிள்ளையாருக்கு தினம் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற நட்சத்திரத்தன்று, ஏகாதசி ருத்ர ஜப பாராயணம், ஹோமம், விசேஷ அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை/ லட்சார்ச்சனை, அன்னதானம் முதலியன நடைபெறுகின்றன. வெள்ளிக் கிழமை, சங்கடஹர சதுர்த்தி, தமிழ்ப் புத்தாண்டு, விநாயக சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை மாத சோம வாரங்கள், கார்த்திகை தீபம், மார்கழி மாதத்தில் விடியற் காலை (தனுர் மாத பூஜை), பொங்கல் நாள் ஆகிய நாட்களில் விசேஷ பூஜையும், பிரசாத விநியோகமும் நடைபெறுகின்றன. ஆதி கும்பேஸ்வரப் பிள்ளையாரை நேரில் வந்து தரிசித்தவர்களுக்கு அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்காக வருந்தி வேண்டினால் பாவ விமோசனமும், மன அமைதியும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

திருவாரூர்-மோகனூர் பேருந்து தடத்தில் உள்ளது செண்பகபுரம்.


- என்.ஸ்ரீநிவாசன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்