SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு

2016-08-12@ 12:06:35

இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.  அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகள் கூடும் இடத்தில் அம்மன் குடி கொண்டதால் இங்குள்ள மாரியம்மன் இருக்கங்(ன்)குடி மாரியம்மனாக காட்சியளித்தார். வடக்கே அர்ச்சுனா நதியையும் தெற்கே வைப்பாற்றையும் எல்லையாக கொண்டு இடைப்பட்டிருக்கும் நிலப்பரப்பில் நடுநயமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் 10 அடி உயரமுள்ள கல்கோட்டைக்குள் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்வெட்டு கர்ப்பக்கிரகத்தில் கற்சிலா ரூபத்தில் உயிர்ப்புடன் அமர்ந்து தன்னை வணங்கி நிற்பவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வண்ணமுகம் காட்டி, அன்னை பாராசக்தி அருங்காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். கர்ப்பகக்கிரகத்திற்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், அன்னைக்கு வலபுரம் விநாயகர் அமர்ந்திருக்கிறார்.

சன்னதியின் முன்புரம் அமைந்துள்ள மகா மண்டபத்தில் நந்தீஸ்வரர், கொடிமரம், பலிபீடம் அமைந்துள்ளது. மகா மண்டபத்தை அடுத்து மணிமண்டபம் அமைந்துள்ளது. அம்மன் சன்னதியை சுற்றிலும் பரிவார தேவதைகளாக சன்னதிக்கு தென்புரம் வடக்கு வாய்ச்சொல்லி, வெயிலுகாத்தம்மன் உள்னர். இவர்களுக்கு முன்பாக அரச மரத்தடியில் சித்தி விநாயகரும் அமர்ந்து அருள் பாலித்து வருகிறனர். சன்னதிக்கு வடபுறம் பேச்சியம்மனும், முப்பிடாதி அம்மனும், வீரபுத்திரரும், பைரவரும் மற்றும் காத்தவராயரும் அமர்ந்து அருளாசி வழங்கி வருகின்றனர். தெற்கு பிரகார மண்டபத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மாவிளக்கு மண்டபத்தின் உள்ளே உட்புர சுவர்களில் இத்திருத்தலத்தின் ஸ்தல வரலாறும் அன்னை பராசக்தியின் பற்பல அவதாரங்களும், திருவுறுவ படங்களும் வண்ணக் கலவைகளால் உயிர்பெற்று காட்சியளிக்கின்றன.

மாவிளக்கு எடுப்பதற்கு படுத்துக்கிடக்கும் பக்தர்களின் பார்வை செல்லுமிடங்களாகிய மண்டபத்தின் மேற்கூரையில் அஷ்டலட்சுமியின் அவதார திருஉருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன. கோட்டை சுவருக்கு வெளியே தென்கிழக்கு பகுதியில் காவல் தெய்வமாகிய கருப்பசாமிக்கு சன்னதி அமைந்துள்ளது. திருக்கோயிலின் தென்கிழக்கு பகுதியின் வடக்கு பார்த்தவாறு கயிறு குத்து மஞ்சள் நீராட்டு அம்மன் கோயில் உள்ளது. பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி அமைப்பிருக்கும். ஆனால் இருக்கன்குடி மாரியம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கின்றார். இந்த அமைப்பு இருக்கன்குடி மாரியம்மனின் சிறப்பு அம்சமாகும். இருக்கன்குடி மாரியம்மனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய், தீராத வயிற்று வலி, அம்மைநோய்கள் தீரும்.

கோரிக்கைகள் நிறைவேறியதும், நோய் தீர்ந்தவுடனும் அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தும், மாவிளக்கு ஏந்திம், அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம். ஆதியில் தினமும் காலை, மாலை இரண்டு வேளை மட்டுமே நித்திய பூஜைகள் நடைபெற்று வந்தது. பக்தர்கள் வருகை அதிகரித்ததும் பழைய நடைமுறைகள் மாற்றப்பட்டு தற்போது உதயபூஜை, காலசந்தி பூஜை, திருக்கால பூஜை, உச்சிக்காலபூஜை, சாயரட்சைபூஜை, அர்த்தஜாம பூஜை என தினமும் ஆறு கால பூஜைகள் நித்திய பூஜைகளாக  நடைபெற்று வருகின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களின் தரிசன வசதிக்காக காலை நடை திறப்பு முதல் இரவு பூஜை முடியும் வரை தொடர்ந்து சன்னதி நடைதிறந்து இருக்கும்.

திருவிழா காலங்கள் தவிர மற்ற தினங்களில் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மனிவரை சன்னதி நடை சாத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இரவு முழுவதிலும் பௌர்ணமி திதி அமைந்திருக்கும் தினத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் அபிஷேகமும், சிறப்பு பூஜையும் திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். திருவிழா காலங்களான ஆடி, தை, பங்குனி கடைசி வெள்ளிக்கிழமைகளிலும், விஷேச நாட்களான சித்திரை வருடப்பிறப்பு, திபாவளி, திருக்கார்த்திகை உட்பட விஷேச நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், விஷேச பூஜைகளும் நடைபெறும். தை கடைசி வெள்ளியிலும் பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள்பெறக் கூடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

விழாக் காலங்களிலே அம்மன் அருள்பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள்வெள்ளம் பல்வேறு வாகனங்களில் வந்து கூடி, நேர்த்திக்கடன் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும். அம்மனுக்கு அக்னி சட்டியும், ஆயிரங்கண்பானையும் எடுத்து அருளோடு வலம் வந்து வாயார வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பாகும். குறை நிவர்த்தி வேண்டி திருகோயிலில் தங்கி வயனம் காக்கும் பார்வையற்றோர்க்கு பார்வையளித்தும், தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், மக்கள் பேறு அளித்தும், மாங்கல்ய பாக்கியம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனைத் தரிசித்து அருள்பெறுவோமாக!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்