SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

2016-08-03@ 12:26:45

ராமநாதபுரம் : ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்புல்லாணி சேதுக்கரை மற்றும் தேவிபட்டினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். ஆடி, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களின் நினைவாக இந்துக்கள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, தேவிபட்டினம், திருப்புல்லாணி சேதுக்கரை கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசை நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

தேவிபட்டினம் நவபாஷான கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், பஸ்களிலும் வந்து புனித நீராடி விட்டு சென்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தேவிபட்டினம் நகரமே நேற்று சுகாதாரமின்றி காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்தும், சிறுநீர் கழிக்கப்பட்டும் துர்நாற்றம் வீசியது. நவபாஷான கடற்கரையில் ஒரு கட்டண கழிப்பறையை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. நுழைவு கட்டணமாக வாகனங்களுக்கு ரூ.50ம், டூவீலர்களுக்கு ரூ.10ம் கட்டணமாக பெறப்பட்டது. நவபாஷான கடலுக்குள் செல்ல நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. ஆனால் பஸ் ஸ்டாண்ட் வரும் வழிகளில் சிலர் நின்று கொண்டு ரூ.5 நுழைவுக் கட்டண டிக்கெட்டுகளை ரூ.30 வரை விற்றனர். மதுரையை சேர்ந்த பக்தர் சுரேஷ் கூறுகையில், நவபாஷான நுழைவு டிக்கெட்டை பஸ் ஸ்டாண்டில் வைத்து ஒருவர் ரூ.30க்கு விற்றார்.

கட்டாயப்படுத்தி எங்களிடம் விற்றதால் நாங்களும் அதை வாங்கிக் கொண்டு சென்றோம். இதுபோன்று வசூலித்தும் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திருப்புல்லாணி சேதுக்கரை அதிகாலை 4 மணியிலிருந்து பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணியிலிருந்து சேதுக்கரைக்கு வந்த வாகனங்கள் அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே மேலப்புதுக்குடி கிராமம் அருகே நிறுத்தப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் நடந்து சென்றனர். காலை 7 மணியிலிருந்து 10 மணி வரை சேதுக்கரையிலிருந்து பிச்சைவலசை கிராமம் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அங்கு கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு பித்ரு சாந்தி தர்ப்பணம் செய்த பின் கடலில் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள ஜெயவீர ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர். தொண்டி அருகே தீர்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர்.

இதுபோல் கடலாடி அருகே மாரியூர் கடற்கரையில் பொதுமக்கள் அதிகாலையில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, திதி கொடுத்தனர். பிறகு அங்குள்ள பூவேந்தியநாதர், பவளநிறவள்ளி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சணாமூர்த்திக்கு சிறப்பு யாகங்கள் நடத்தி, புனித நீரால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதில் கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் கமுதி பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாயல்குடி கைலாசநாதர் ஆலயத்தில் தட்சணா மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கடலாடி வனபேச்சியம்மன், ராககாச்சி அம்மன் கோயில், பூங்குளத்து மாடசாமி கோயில் உள்ளிட்ட கடலாடி, சாயல்குடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆடிப்பெருக்கையொட்டி ஆப்பனுர் அரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம் நடத்தப்பட்டு,சிறப்பு பூஜைகள் நடந்தது. பிறகு விவசாயிகள் விவசாய நிலங்களில் படையலிட்டு, ஏர் உழுதனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்