SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பான வாழ்வளிப்பாள் சந்தன மாரியம்மன்

2016-07-23@ 10:50:59

நம்ம ஊரு சாமிகள் : ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அக்ரஹாரத்தின் நிர்வாக கமிட்டிக்கு தலைவராக இருந்தார் அரிகிருஷ்ணன். நல்ல பெயரோடும், புகழோடும் திகழ்ந்த அவருக்கும், அவரது மனைவி அனந்தாயிக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகம் கண்டு மருத்துவச்சி கூறினாள்: யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காமல், பழி பாவங்களுக்கு அஞ்சி நல்வழி நடந்து வந்த சாமி, உனக்கு பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமியே மகளாக பிறந்திருக்கிறாள். குழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவத்தை அக்ரஹாரமே வியக்கும் வண்ணம் நடத்தி, கிருஷ்ணம்மாள் என்ற தன் தாயின் பெயரை மகளுக்குச் சூட்டினார் அரிகிருஷ்ணன். நெல்லை டவுன் ஜோதிடரிடம் சென்று மகளுக்கு ஜாதகம் கணித்தார்.

ஜோதிடர், ‘‘ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்துள்ள கிருஷ்ணம்மாள் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளது. அதற்கு பரிகாரமாக வீட்டிலேயே கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்து வாருங்கள்,’’ என்று கூறினார். அதன்படி வல்லநாடு மலையிலிருந்து நண்பர்கள் பிடித்து வந்த கீரிப்பிள்ளையை வளர்த்து வந்தார் அரிகிருஷ்ணன். ஆரம்பத்தில் அதனைக் கண்டு அச்சம் கொண்ட அனந்தாயி, நாளடைவில் கீரிப்பிள்ளையை தனது பிள்ளையாக நினைத்து அன்போடும் பரிவோடும் வளர்த்து வந்தாள். குழந்தை கிருஷ்ணம்மாளும், கீரிப்பிள்ளையுடன் நெருங்கிப் பழகி வந்தாள். கோயிலுக்குப் போகும்போதெல்லாம், ‘தங்கை பாப்பாவ பார்த்துக்கோ’ என்று உரிமையுடன் சொல்ல, கீரிப்பிள்ளையும் அனந்தாயி திரும்ப வரும்வரை குழந்தைத் தொட்டிலைவிட்டு நகருவதேயில்லை.

ஒருநாள் அரிகிருஷ்ணன் டவுன்வரை போயிருந்தபோது, அவர் சொன்னபடி தோட்டவேலை செய்பவர்களை கண்காணிக்க அனந்தாயி தோட்டத்துக்குப் புறப்பட்டாள். குழந்தை முன் விளையாட்டு பொருட்களை வைத்துவிட்டு, கீரிப்பிள்ளையையும் வழக்கம் போல் காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றாள். அந்த நேரம் வீட்டு மடைவழியே நாகம் ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. அதைக்கண்ட கீரிப்பிள்ளை நாகத்தினுடன் சண்டை போட்டு கடித்துக் கொன்றது. பிறகு அனந்தாயியைத் தேடி தோட்டத்திற்கு சென்றது.  நாகத்தை கடித்துக் கொன்றதால் அதன் வாய் மற்றும் முகம் முழுக்க ரத்த கறை படிந்திருந்தது. அதைப் பார்த்து திடுக்கிட்டாள் அனந்தாயி. பிள்ளையா வளர்த்த கீரிப்பிள்ளை, நம்ம குழந்தையைக் கடிச்சு கொன்றுட்டதோ என்று பதறிப்போய் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.

அப்போது கீரிப்பிள்ளை அருகே வரவே எதிரே இருந்த மண்வெட்டியை எடுத்து அதன்மீது எறிந்தாள். மண்வெட்டி பட்டு கீரிப்பிள்ளை அந்த இடத்திலேயே இறந்து போனது. அனந்தாயி ஓடோடிவந்து பார்த்தபோது, குழந்தை கிருஷ்ணம்மாள் விளையாடிக்கொண்டிருந்தாள். வீட்டு துளசிமாடம் அருகே இறந்த நாகத்தின் உடல் பாகங்கள் 3 துண்டுகளாக கிடந்தன. நடந்ததை யூகித்தாள். ‘தவறு செய்து விட்டேனே. நான் வளர்த்த கீரிப்பிள்ளையை நானே கொன்று விட்டேனே,’ என்று அரற்றினாள். அப்போது வீட்டிற்கு வந்த அரிகிருஷ்ணனிடம் நடந்தவற்றை கூறினாள். அவர் மனைவியை சாந்தப்படுத்தினார். மனைவி செய்த பாவம் தீர அரிகிருஷ்ணன் தன் தோழர்கள் ஏழு பேருடன் தீர்த்த யாத்திரைக்கு சென்றார். பாபநாசத்தில் தீர்த்தமாடி பரமனைத் தொழுதார்.

மனம் உருகி தியானத்தில் ஆழ்ந்தார். நேரம் கடந்து மாலை, இரவாகியது. தியானத்திலிருந்து மீண்ட அரிகிருஷ்ணன், நண்பர்கள் இரவில் ஊர் திரும்பவேண்டாம் என்று சொன்ன யோசனைப்படி அங்கிருந்த மடத்தில் தங்கிவிட்டு நாளை காலை செல்ல முடிவு செய்தார். நள்ளிரவில் கருநாகம் ஒன்று அரிகிருஷ்ணனை தீண்டியது. அவர் மறுகணமே உயிரிழந்தார். மறுநாள் காலை அவர் இறந்துகிடப்பதைக் கண்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நாகவிஷம் பாய்ந்த அவரது உடலை அங்கிருந்து கொண்டு செல்ல இயலாது என்பதால் அங்கேயே எரியூட்டினர். நண்பர்கள் ஸ்ரீ வைகுண்டம் திரும்பி அனந்தாயியிடம் நடந்ததை தெரிவித்தனர். இதைக்கேட்டு பேரதிர்ச்சி அடைந்த அவள் மயங்கி விழுந்தாள்.

ஒன்றரை மாதம் கடந்தபின் மைத்துனன் உறவு முறையில் ஒருவன் வந்து ‘‘அனந்தாயி, நீ உன் குழந்தையுடன் உன் தாய்வீட்டுக்குச் சென்று விடு. அரிகிருஷ்ணன் சொத்தில் உனக்குப் பங்கு கிடையாது,’’ என்று கடுமையாகச் சொன்னான். இதைக்கேட்ட அனந்தாயி, உடனே மணியக்காரரிடம் முறையிட்டாள். அவர், ‘‘உனது கணவருக்கு சொந்தமான வயல்கரையும், வலிய வீடும், மாடும், ஆடும் அம்பலமும், ஆள் அடிமையும், பரிகரியும் உனக்கே சொந்தம்,’’ என்று தீர்ப்பளித்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு, மைத்துனன் மணியக்காரரிடம் சென்று, ஆயிரம் பணம் கொடுத்து, தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு சொல்லுமாறு கேட்டுக்கொள்ள, மனம் மாறிய மணியக்காரர், அனந்தாயியை வீட்டிற்கு அழைத்து ‘‘உனக்கு சொத்துக்கு உரிமையில்லை.

உனக்கு ஆண் வாரிசும் இல்லை. எனவே கொடுக்கும் நகையும், பணமும் பெற்றுக்கொண்டு பிறந்த ஊருக்கு சென்றுவிடு,’’ என்று கூறினார். அதைக் கேட்டு சீறினாள் அனந்தாயி. ‘‘மணியக்காரனே, சுனை வெள்ளம் ஆறாய் பாய்ந்து உன் வீட்டை அழிக்க வேணும். உன் சீமையில் வெள்ள எருக்கு முளைக்க வேணும். சிறுநெருஞ்சி படர வேணும்,’’ என சாபமிட்டாள். ஒரு மாதத்திற்குப் பிறகு மணியக்காரரின் மகள் திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. மனம் வெதும்பிய அனந்தாயி கைக்குழந்தையுடன் காட்டு வழி நடந்தாள். ஸ்ரீவைகுண்டம் ஊரின் மேற்கு பக்கம் உள்ள சுனை அருகே வந்து ஈஸ்வரனை மனம் உருக வேண்டி அழுதாள். ‘வாழ விருப்பமின்றி கைலாசம் வருகிறேன். என்னை ஏற்றுக்கொள்’ என்று கூறி, தனது கைக்குழந்தையை சுனையில் வீசினாள். பின்னர் அவளும் அதில் விழுந்தாள்.

உடனே சுனை வெள்ளம் பொங்கிப் பெருவெள்ளமாகி ஓடி ஊரையே வெள்ளக்காடாக்கியது. மணியக்காரர் மகளையும், மாப்பிள்ளையும் மணக் கோலத்திலேயே வெள்ளம் இழுத்துச் சென்றது. உறவினர்களும், ஊராரும் அழுது புலம்பினர். அந்த வெள்ளத்தில் அனந்தாயின் உடல் மிதந்து வந்து மணியக்காரர் வீட்டில் ஒதுங்கியது. இரண்டு நாட்களாகியும் அந்த உடலிலிருந்து துர்நாற்றம் எதுவும் வீசவில்லை. உடலை எரியூட்டுவது எப்படி என்று யோசித்தபோது அந்த உடலில் இருந்து சந்தன வாசம் வந்தது. அப்போது மணியக்காரர் தான் செய்த தவற்றை உணர்ந்து வீட்டு தூணில் முட்டி கதறி அழுதான். மாண்டுபோக முற்பட்டான். அப்போது அசரீரி கேட்டது: ‘‘தவறை உணர்ந்த முத்தையனே, எனக்கு நிலையம் கொடுத்து பூஜித்து வா, நீ செய்த பாவங்கள் விலகும்.

உன் வம்சாவளியினரை வளமாக வைப்பேன். அதன்படி மணியக்காரர் அனந்தாயி அம்பாளுக்கு கோயில் எழுப்பினார். வெள்ளத்தில் வந்ததால் வெள்ளமாரி என்றும். சந்தனமாக மணம் வீசியதால் சந்தனமாரி என்றும் அழைத்து வழிபட்டு வந்தனர். மகப்பேறு முதலான பல வரங்களைப் பெற்று மக்கள் நிம்மதியடைந்தனர். இந்தக் கோயில் ஸ்ரீவைகுண்டம் அக்ரஹாரம் அருகே, கண்ணபிரான் கோயில் சந்நதித் தெருவில் உள்ளது. மூலவர் சந்தனமாரி நின்ற கோலத்தில், எந்த ஆயுதமும் ஏந்தாமல் அருள்பாலிக்கிறாள். சிலை சந்தன மரத்தால் ஆனது.

- சு.இளம் கலைமாறன்,
படங்கள்: ஸ்ரீவை. ம. ஞானதுரை

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்