SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செழுமையான வாழ்வளிக்கும் செம்மண்!

2016-05-28@ 12:32:03

நம்ம ஊரு சாமிகள் : தேரிக்குடியிருப்பு, தூத்துக்குடி

கற்குவேல் அய்யனார் கிழக்கு திசை நோக்கி, வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை மடக்கி அமர்ந்திருக்கிறார்.  பூரண, பொற்கலை தேவியருடன் அருள்பாலிக்கிறார். இவர் சந்நதிக்கு முன்பு மகாமண்டபத்தில், அவருக்கு வலது பக்கம் விநாயகரும், லாட சந்நியாசியும் அமர்ந்திருக்கின்றனர். அய்யனார் சந்நதிக்கு முன்னால் வெள்ளை நிறத்தில் ஒரு குதிரை சிலை அய்யனாரைப் பார்த்தபடி நிற்கிறது. இரு தேவியருடன் விளங்குபவர் மஹாசாஸ்தாதான். இவருக்கு உரிய வாகனம் யானை. ஆனால் இவரை அய்யனார் என்று ஆதாரபூர்வமாக கூறுவதற்காக, அய்யனாரின் வாகனமான குதிரையை சுதைச் சிற்பமாக
வடிவமைத்துள்ளனர்.

பேச்சியம்மன், மாலையம்மன் என்கிற பத்ரகாளி, பிரம்ம சக்தி என்ற சேலைக்காரியம்மன், இசக்கியம்மன், புலமாடத்தி அம்மன், சப்த கன்னியர் மற்றும் காவல் தெய்வங்களாக சுடலைமாடன், முன்னடியான், பின்னடியான், பட்டவராயன், வன்னியராஜன், சின்னதம்பி, உதிரமாடன், கருப்பசாமி, தளவாய் நல்ல மாடசாமி, பொன் காத்த அய்யனார், ஐவர் ராஜா, பலவேசக்காரன், பகடை வீராசாமி, ஒடக்கரை சாமி, கசமாடன், அத்திமாடன், சங்கிலி பூதத்தார், புலமாடசாமி, மரக்கடா சாமி, வீரபத்திரர் என்ற பெரியாண்டவர், சிவனிணைந்த பெருமாள், பிணமாலை சூடும் பெருமாள், செருக்கன், இருளப்பன் ஆகிய தெய்வங்கள் இவ்வாலயத்தில் நிலையம் கொண்டு பக்தர்களுக்கு அருளையும், அய்யனாருக்கு காவலையும் புரிகின்றனர்.

இவ்வாலயத்தின் மற்றொரு தெய்வம்தான் கள்ளர்சாமி. அவர் பெயரால் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழாவே இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகும். கற்குவேல் அய்யனாரை வேண்டி பலன் பெற்ற சிற்றரசர்களும், நிலச்சுவான்தார்களும் நிலம், தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் முதலானவற்றை கோயிலுக்கு தானமாகக் கொடுத்தனர். இதனால் கோயில் கருவூல பெட்டகத்தில் ஆபரணங்கள் அதிகமாக இருந்தன. இதையறிந்த விஜயநகர பேரரசின் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த (இப்போதைய ஆந்திரா) குப்பண்ணா என்பவன் தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்புக்கு வந்தான். கோயிலை நோட்டமிட்ட அவன் பொருட்களை களவாட திட்டமிட்டு செம்மண்தேரி பகுதியில் பனைமரங்களுக்கிடையே தங்கினான். நள்ளிரவு நேரம் சில ஆயுதங்களுடன் கோயிலுக்குள் நுழைந்தான்.

கருவூலக பெட்டியில் இருந்த ஆபரணங்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானான். அப்போது அந்த மூட்டையைப் பிடித்து யாரோ இழுப்பதுபோல் இருந்தது. பின்னால் திரும்பிப்பார்த்தான். அங்கே முன்னடியான், வன்னியராஜன், பட்டவராயன், உதிரமாடன் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். உடனே வன்னியராஜன் கள்ளனின் கைகளை பின்புறமாகக் கட்டினார். முன்னடியான் அவனை இழுத்துச் சென்றார். அனைவரும் சேர்ந்து அய்யனார் முன்பு கள்ளனை நிறுத்தினார்கள். அய்யனார் அவனை கோயிலின் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கொண்டு சென்று சிரச்சேதம் செய்துவிடுங்கள் என்றார். அதன்படி அவனை செம்மண் தேரிக்கு அழைத்துச் சென்று தலையை வெட்டி எறிந்தனர். அவனது ஆவி, அய்யனாரை அழைத்தபடி கோயிலின் வாசலில் நின்றபடி கத்தியது: ‘‘கட்டிய மனைவியும், பெற்ற நல்பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள்.

பிழைப்புக்கு வழியுமில்லை, பேரரசனும் உதவவில்லை. கருணை காட்ட யாருமில்லை, களவாட உம் இருப்பிடம் வந்தேன். பிச்சாடனார் மைந்தனே, உயிர் பிச்சை தாரும். பழி பாவத்தால் இழி பிறப்புக்குள்ளான என்னை போற்றி புகழ்ந்துரைக்கும் வகையில் வாழ்வு கொடும். ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். உம்மால் உயர்வு பெற வேண்டும்.’’ ‘‘மாண்டவன் மீள்வதில்லை, இது மானுட நீதி. உம் மனைவி, மக்கள் எல்லா வளத்துடன் வாழ்வார்கள். நீ என் சந்நதியில் கள்ளர்சாமி என்ற பெயரில் வணங்கப்படுவாய். எனது ஆலய விழாவில் நீ முக்கியத்துவம் பெறுவாய். உன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு நீ கொடுக்கும் வரம், அவர்களை மேன்மை அடையச் செய்யும். உனது மரணம் திருட நினைக்கும் யாவருக்கும் பாடமாக அமையும் வகையில் கள்ளன் உன்னை வெட்டிய நிகழ்வே என் ஆலய விழாவில் முக்கிய நிகழ்வாகட்டும்,’’ என்று உரைத்தார் அய்யனார்.

அதன்படி கள்ளனான குப்பண்ணன் தெய்வமானார். கள்ளனிடம் உரை நிகழ்த்தியதை, கோயில் நிர்வாகியின் கனவில் அய்யனார் கூறினார். உடனே கோயிலில் கள்ளர்சாமிக்கு சிலை நிறுவி வழிபடலானார்கள். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 30ம் தேதி கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறுகிறது. விழாவின்போது காலையில் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். அப்போது காவல் தெய்வங்களின் அருள்வந்து கோமரத்தாடிகள் ஆடுவர். கள்ளர்சாமிக்கு ஒருவர் சாமியாடுவார். இடுப்பில் கச்சைகட்டி, கழுத்தில் மாலையும், கையில் வல்லயமும் கொண்டு, அவர் கள்ளர்சாமியின் அருள்வந்து ஆடுவார். அப்போது பூசாரி, அவரை கள்ளர்சாமியாக பாவித்து, அவருக்கு பரிவட்டம் கட்டி, ஐவர் ராஜா சாமி சந்நதியிலிருந்து எடுத்து வந்து சுருள் பணம் கொடுப்பார்.

பின்னர் பேச்சியம்மன் சந்நதி முன்பு நின்று, ‘‘தாயே நான் போகிறேன். உத்தரவு கொடு அம்மா’’ என்று கள்ளர்சாமிக்கு ஆடுபவர் கேட்பார். உடனே பேச்சியம்மன் ஆடுபவர் அல்லது பூசாரி திருநீறு கொடுப்பர். கள்ளர்சாமியை தச்சநல்லூரிலிருந்து ஒரு குலத்தவர் கொண்டு வரும் புதிய கயிற்றால் கட்டி, அவரை இழுத்து வருவார்கள். அவருக்குப் பின்னால் மற்ற சாமியாடிகள் கைகளில் ஆயுதம் ஏந்தி அருளோடு வருவார்கள். ஊரை வலம் வந்து செம்மண் தேரி பகுதிக்கு அழைத்து வருவார்கள். பூசாரி தாம்பளத்தில் செவ்விளநீர், வெள்ளை மாலை ஆகியவற்றை எடுத்து வருவார். இளநீரை வெட்ட, உதயத்தூர் கிராமத்திலிருந்து ஒரு குலத்தவர் அரிவாள் கொண்டு வருவார்கள்.

ஆண்டுதோறும் புதிய கயிறு, புதிய அரிவாள் கொண்டு வரப்படுகிறது. செம்மண் தேரியில் வைத்து செவ்விளநீரை கள்ளனாக பாவித்து வன்னியராஜன் உள்ளிட்ட காவல் தெய்வத்திற்கு ஆடும் கோமரத்தாடிகள் வெட்டுவர். அந்த இளநீர் பட்ட மண் செந்நிறமாக ரத்தம் படிந்த மண் போல் இருக்கும். அந்த மண்ணை வீட்டிற்கு எடுத்துச்சென்றால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்பதால், அந்த மண்ணை அள்ள பக்தர்களிடையே கடும் போட்டி நிலவும். தெய்வமாக மாறிய திருடனை வணங்குபவர்களுக்கு எல்லா பாக்கியமும் கிடைப்பதாக அப்பகுதியினர் மெய்சிலிர்க்கக் கூறுகின்றனர். இந்தக்கோயில் தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது. கோயில் இருக்கும் இடம் குதிரைமொழித்தேரி என்றழைக்கப்படுகிறது.

- சு.இளம்கலைமாறன்
படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு
உடன்குடி கோ.சாமுவேல்ராஜ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்