SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பான வாழ்வளிப்பார் சிவனிணைந்த பெருமாள்

2016-04-16@ 11:41:53

நம்ம ஊரு சாமிகள் : கிளங்காடு, தென்காசி

நெல்லை மாவட்டம் செங்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு செம்பவளராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். தென்காசி பகுதியை ஆண்டு வந்த  சிற்றரசன் சீவலமாறனின் தங்கை பொன்னுமணியை திருமணம் செய்ய ஆசை கொண்டு பெண் கேட்டான். அப்போது சீவலமாறன் நாங்கள் வைணவத்தை  சேர்ந்தவர்கள். நீங்கள் சைவத்தை சேர்ந்தவர்கள். அதனால் இருவருக்கும் ஒத்துப்போகாது என்று கூறி மறுத்தான் சீவலமாறன். அப்போது சீவலமாறனின் தந்தை,  ‘மகனே, நாம் அவனுக்கு கப்பம் கட்டுபவர்கள்’ என்று சொல்லி, மகனை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். மன்னன்  செம்பவளராஜனுக்கும், பொன்மணி என்ற பொன்னுவுக்கும் திருமணம் நடந்தேறியது. மணம் முடிந்து ஆண்டுகள் சில கடந்தும் குழந்தைச் செல்வம் இல்லையே  என்ற கவலை செம்பவளராஜனை ஆட்கொண்டது.

தனது தங்கைக்கு குழந்தை பாக்யம் கிட்ட வேண்டும் என்று வைணவத்தலங்களில் கும்பாபிஷேகமும், தான, தர்மங்களும் செய்து வந்தான் சீவலமாறன்.  அதேநேரம் சிவதலங்களில் திருப்பணிகளும், யாகங்களும் நடத்தினான் செம்பவளராஜன். இந்த நிலையில் பொன்னு கர்ப்பமுற்று, அழகான ஆண் குழந்தையை  பெற்றெடுத்தாள். ‘என் தங்கைக்கு குழந்தை கிடைத்தது. பெருமாள் தந்த வரம்’ என்றான் சீவலமாறன். ‘எல்லாம் என் அப்பன் சிவன் அருள்தான்,’ என்றான்  செம்பவளராஜன். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கவனித்த சீவலமாறனின் தந்தை, ‘‘அரன்-அரியால் சாஸ்தா அவதரித்தது போல் அவர்கள் இருவரது  அருளாலும் இந்த மழலை வரம் கிட்டியது. இதனால் உங்களுக்குள் சினம் வேண்டாம். குழந்தைக்கு சிவன், பெருமாளையும் இருவரையும் குறிப்பிடும் வகையில்  சிவனிணைந்த பெருமாள் என்று பெயர் சூட்டுகிறேன்,’’ என்றார்.

சிவனிணைந்த பெருமாளுக்கு அனைத்து அரசுப் பயிற்சிகளையும் அளித்தார் செம்பவளராஜன். அதேநேரம் சீவலமாறனுக்குப் பிறந்த தனலட்சுமி என்ற பெண்  குழந்தையை தங்கை மகன் சிவனிணைந்த பெருமாளுக்கு மணமுடித்து கொடுக்கத் திட்டமிட்டான் சீவலமாறன். ஒரு நாள், வாலிபனாகிவிட்ட சிவனிணைந்த  பெருமாள், தன் அந்தரங்கத் தோழன் சவுண்டப்பனுடன் செங்கோட்டை பகுதியிலிலுள்ள குளக்கரை ஓரம் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தான். அந்த குளத்தில்  ஒரு அழகான இளம்பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகு அவனை மயக்க, உடனே, அவளிடம் சென்று, ‘‘பெண்ணே நீ யார்? மிகவும்  அழகாக இருக்கிறாயே!’’ என்று கூறினான். அதற்கு அவள் ‘‘இளவரசே, நான் ஊரார் துணி வெளுக்கும் பாதாளகருப்பன் மகள், என் பெயர் சின்னணைஞ்சி,  எனக்கு 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. எனது கணவர் சாந்தப்பன் புளியரையில வெள்ளாவிக்கு போயிருக்காங்க,’’என்றாள்.

‘‘உன் அழகு என்னை மயக்குகிறது,’’ என்றான் இளவரசன். ‘‘அடி, ஆத்தி, இளவரசே, நான் இன்னொருத்தன் மனைவி, அது மட்டுமல்ல, எங்களை கண்ணுக்கு  தெரியாத சாமி காப்பத்துறது ஒருபுறம் இருந்தாலும். கண்ணுக்கு தெரிஞ்ச கடவுளா இருக்கிற மன்னன், நீங்களே இப்படியெல்லாம் பேசலாமா?’’ என்று  சமாதானம் கூறினாள். உடனே துணி துவைப்பதை நிறுத்திவிட்டு, துணிகளை அள்ளிக்கொண்டு அவள் இல்லம் சென்றாள். பேதை போதை கொண்ட  சிவனிணைந்த பெருமாளுக்கு எதுவும் ஏறவில்லை. அப்படியே விரக்தியில் அரண்மனைக்கு திரும்பினான். இரவு முழுவதும் அவள் நினைவுதான். காலையில்  தோழன் சவுண்டப்பனிடம் விவரம் சொன்னான். பதிலுக்கு அவனும் சிவனிணைந்த பெருமாளின் காமத்தீயை மேலும் கிளறிவிட்டான். எப்படியும் அவளை  அடைந்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு வந்த சிவனிணைந்த பெருமாளிடம், ‘‘ராஜகுமாரா, மதி மயக்கும் மை, மலையாள மாந்திரீகவாதியிடம் இருந்து  வாங்கி வருகிறேன்.

அதற்கு 50 பொற்காசுகள் செலவாகும்,’’ என்று கூறி, வாங்கிச் சென்றான். மலையாள நாட்டில், 20 பொற்காசுகளுக்கு மைச்சிமிழ் வாங்கி வந்தவன். மீதம் உள்ள  30 பொற்காசுகளை தனது வீட்டில் பதுக்கி வைத்தான். மையுடன் வந்த தோழனிடம், ‘‘இந்த மையை கொண்டு என்ன செய்யப்போகிறாய்?’’ என்று கேட்டான்  சிவனிணைந்த பெருமாள். ‘‘இதை வளையல்காரரிடம் கொடுத்து சின்னணைஞ்சி எப்போ மை வாங்க வந்தாலும், இந்த மையைத்தான் கொடுக்கணும்னு  சொல்லப்போறேன்,’’ என்றான். அப்படியே 10 பொற்காசுகளை வளையல்காரரிடம் கொடுத்துத் தன் திட்டத்தையும் விவரித்தான். வளையல்காரன் மறுநாளே  சின்னணைஞ்சியிடம் ‘இந்த மை அழகை அதிகரிக்கும், போட்டுத்தேன் பாரேன்,’’ என்று சொல்லி, மந்திரித்த மை அடங்கிய சிமிழை அவளிடம் கொடுத்தான்.
 
அந்த மையை வாங்கித் விழிகளுக்குத் தீட்டிக்கொண்டாள் சின்னணைஞ்சி. மந்திர மை வேலை செய்ய ஆரம்பித்தது. அன்று வெள்ளாவிக்கு போக வேண்டாம்  என்று நினைத்திருந்த அவள், குளக்கரைக்கு சென்றாள். அங்கே சவுண்டப்பன் காத்திருந்தான். அவளிடம் பேச்சுக்கொடுத்து தன்பின் வரச்செய்து ஒரு குகைக்குள்  நுழைந்தான். அப்போது சொல்லிவைத்தபடி சிவனிணைந்த பெருமாள் வர, அவர்கள் இருவரையும் குகைக்குள் விட்டுவிட்டு சவுண்டப்பன் வெளியே காவலுக்கு  நின்றான். மூன்று நாட்களாக சின்னணைஞ்சியை காணவில்லை என்றதும் அவளைப் பெற்றவர்களும், கட்டியவன் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒன்று  திரண்டு, அரண்மனை வாசலில் கூடினர். ‘‘மன்னா, எங்களுக்குத் தங்கள் மகன் மீது சந்தேகமாக இருக்கிறது, நீங்கள் தான் விசாரிக்க வேண்டும்,’’ என்று  முறையிட்டனர். திடுக்கிட்ட மன்னன், ‘‘உங்கள் மகள் வீடு தேடி வருவாள், கலங்காமல் செல்லுங்கள்,’’ என்று உறுதியளித்து அவர்களை அனுப்பிவைத்தான்.

தனது மகன் அடிக்கடி இரண்டு, மூன்று நாட்கள் வெளியே தங்கியிருந்து வேட்டையாடி விட்டு வருவானே, அப்படித்தான் இப்போதும் சென்றிருப்பான் என  எண்ணியிருந்த மன்னனுக்கு, மக்களின் குற்றச்சாட்டைக் கேட்டு கோபம் பொங்கியது. ‘அவர்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து என்முன் கொண்டு  வாருங்கள்,’ என்று ஆணையிட்டான். அதன்படி சேவகர்களுடன் சென்ற அமைச்சர், அலைந்து திரிந்து, கடைசியாக மலைக்குகைக்குள் இருவரும் இருப்பதை  கண்டனர்.  ‘‘இளவரசே, இவளை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் என்னோடு புறப்பட்டு வாருங்கள்,’’ என்றார் அமைச்சர். அதை சிவனிணைந்த  பெருமாள் சுத்தமாக நிராகரித்துவிட்டான். ‘சின்னணைஞ்சி இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என்றான்.

‘‘அரண்மனைக்காரர்கள் இப்படி அனுபவிப்பது புதிதல்ல. அவள் மேல் பிரியம் அதிகம் இருந்தால் பொன்னோ, பொருளோ அள்ளிக் கொடுங்கள். அதற்காக  அவளை மனைவியாக்கி வாழ்க்கை கொடுப்பது சரியல்ல,’’ என்றார் அமைச்சர். ‘‘முடியவே முடியாது. புருஷனை விட்டுவிட்டு, என்னை நம்பி வந்த  இவள்தான் என் மனைவி,’’ என்றான் சிவனிணைந்த பெருமாள். அதோடு தன் உடைவாளை உருவி, ‘‘வந்த வழியே செல்லுங்கள். இவளைக்  கைவிடமாட்டேன் என்று நான் வாக்களித்திருக்கிறேன்,’’ என்று கோபம் காட்டினான்.  அமைச்சரும், உடன் வந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
விவரம் அறிந்த செம்பவளராஜன், சீவலமாறனுக்கு ஓலை அனுப்பினான். ஓடோடி வந்த அவன், மலைகுகைக்கு சென்றான், மருமகனிடம் கெஞ்சினான். ஆனால்,  சிவனிணைந்த பெருமாள் கேட்கவில்லை.

உடனே சீவலமாறன், ‘தகுதியற்றவளோடு உறவாடிய இவனை வெட்டிக்கொல்லுங்கள்,’ என்று தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான். வீரர்களின் தாக்குதல்களை  சமாளிக்க முடியாத சிவனிணைந்த பெருமாள், தளர்ந்து விழுந்தான். அவன் உடலை சங்கிலியால் கட்டி கொலைக்களத்துக்கு இழுத்து வந்தனர். குடத்து நீரை  அவர்மேல் ஊற்றி, காவி ஆடையையும், ஆணிகள் பொருத்தப்பட்ட செருப்பையும் அணிவித்தனர். 6 மாதங்கள் சிறையிலிட்டு, பின்னர் கழுவேற்றி துடிதுடிக்க  வெட்டிக் கொன்றனர். சிவனிணைந்த பெருமாள் உயிர் துறந்த செய்தி கேட்டு, சின்னணைஞ்சியும் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். நாட்கள் பல சென்ற பின்  இரண்டு ஆவிகளும், அந்த பகுதியில் வருவோர், போவோரை பலி வாங்கின.

அப்பகுதி மக்களில் உயர்குடியை சேர்ந்தவர்கள் சிவனிணைந்த பெருமாளுக்கும், மற்றவர்கள் சின்னணைஞ்சிக்கும் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.  சிவனிணைந்த பெருமாள் தெய்வமாகி, தம் வாழ்க்கையை சீரமைக்கிறார் என்று நம்பி வருகிறார்கள், பக்தர்கள். சிவனிணைந்த பெருமாள், சுடலைமாடன்  கோயில்களில் நிலையம் கொண்டிருப்பார். அவருக்கு சைவ படையலே படைக்கப்படுகிறது. பல கோயில்களில் வீற்றிருந்தாலும் தென்காசி கிளங்காடு கோயிலில்  தனிச்சந்நதி கொண்டு, முதன்மை பெற்று திகழ்கிறார். இந்தக் கோயில் தென்காசி அடுத்துள்ள கிளங்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது.

- சு.இளம்கலைமாறன்
படங்கள்: முருகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-05-2019

  27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்