SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோகங்களைப் போக்கும் ராக்காயி அம்மன்!

2016-02-05@ 10:01:34

நன்றி ஆன்மீக பலன்

மதுரை அருகே உள்ள அழகர்மலைமீது நூபுரகங்கை உற்பத்தியாகும் இடத்திற்குப் பக்கத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள் ராக்காயி அம்மன். நூபுர கங்கை ஊற்றாக உற்பவித்து ஆறாக ஓடுகிறது! இது பிற எல்லா தீர்த்தங்களுக்கும் தாயாக விளங்குகிறது, கொடிய பாவங்களைப் போக்கவல்லது, திருமாலின் திருவடிக்குப் பணி செய்யும் திருமகளைப் போன்று சிறப்புமிக்கது என்றெல்லாம் போற்றப்படுகிறது. பிரம்ம தேவன், திரிவிக்ரமாவதார மூர்த்தியின் சிலம்பணிந்த கமலப் பாதங்களை தன் இரு கரங்களாலும் அபிஷேகிக்க, அந்தத் திருவடித் தாமரையில் பட்ட புனித நீர் இந்த மலையில் வீழ்ந்து நூபுர கங்கை என்னும் பெயர் பெற்றது என்றும், இந்த தீர்த்தத்தில் நீராடுவது, கங்கையில் நீராடுவதைக் காட்டிலும் உயர்ந்தது என்றும் கூறுகிறார்கள். இறைவன் பொற்பாதச் சிலம்பிலிருந்து தெறித்துப் பெருகியதால் இந்த ஆறு சிலம்பாறு என்றும் கூறப்படுகிறது.

இந்த நதியைக் கண்ணால் பார்த்தாலேயே பாவங்கள் போகும் என்று நம்பப்படுகிறது. அப்படி இருக்க இந்தத் தீர்த்தத்தைத் தொடுவதாலும், நீரைப் பருகுவதாலும், அதில் நீராடுவதாலும், தோஷங்கள் நீங்கி, நோய்கள் மறைந்து, செல்வ வளம் மிக்கவர்களாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த தெய்வீக நதிக் கரையில் செய்யப்படும் தானங்கள், வேள்விகள், ஜெபங்கள் எல்லாம் மானிடர்களுக்கு ஆயிரம் மடங்கு புண்ணியமாகப் பெருகி விடுகிறது என்றும் இந்த நூபுர கங்கா நதியின் அலைகளிலிருந்து வீசும் காற்று, எங்கெல்லாம் பரவுகிறதோ, அங்கே வசிப்பவர்களுக்கெல்லாம் முக்தி கிடைக்கிறது என்பது ஐதீகம். நூபுர கங்கை மாதவி மண்டபம் என்னும் இடத்தில் இருந்து உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது. இந்த நூபுர கங்கை பாயும் இடத்தில்தான் ராக்காயி அம்மன் கோயில் இருக்கிறது.

இந்தக் கோயில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ளது. சுற்றிலும் அடர்ந்த காடுகள் கொண்ட மலைப் பிரதேசம். இந்தக் காடுகளில் ஏராளமான மூலிகைச் செடிகள், கொடிகள், மரங்கள் இருக்கின்றன. இந்த மூலிகைக் காடுகளின் வழியாக சிலம்பாறு பாய்ந்து வருவதால் அந்த நீருக்கு இயற்கையாகவே ஏராளமான மருத்துவ சக்தி இருக்கிறது. அதோடு புனிதத் தன்மையும் சேரும்போது அந்த ஆற்றில் ஒரு முறை நீராடி எழுந்தாலே, அந்த நீரைப் பருகினாலே வயிறு சம்பந்தப்பட்ட மற்றும் பிற நோய்களும் மறைந்து போகின்றன, பல நாட்கள் தொடர்ந்து நீராடினால் மனநோய்களும் மறைகின்றன என்கிறார்கள். பழமுதிர்ச்சோலையில் இருந்து சற்று மேடாகப் போகும் வழியில் சிறிது தூரம் நடந்து, ஏராளமான படிகளைக் கடந்து ராக்காயி அம்மன் கோயிலை அடையலாம். வழியில் ஏராளமான குரங்குகள்.

படிகள் ஏறிச் செல்பவர்கள் பொரிகடலை விற்பவர்களிடமிருந்து பொரி வாங்கி குரங்குகளுக்குப் போட்டு விட்டு ஆஞ்சநேயா என்று சொல்லி பக்தி சிரத்தையுடன் கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள். படிகளுக்கு மேலே, உச்சியில் பெரிய மண்டபம் காணப்படுகிறது. இங்கே தங்களுடைய உடைமைகளை வைத்து விட்டு உடன் வந்த யாராவது ஒருவரை அவற்றைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, குளிப்பதற்கு என்று தனியாக உள்ள பகுதியில் கிணறு போன்ற அமைப்பிலிருந்து பக்கெட்டில் நீர் முகந்து தலையில் ஊற்றிக் குளிக்கிறார்கள். காடு வழியாக வரும் நீர் பக்தர்களின் சௌகரியத்திற்காக இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். கோயிலுக்கு வருபவர்கள் எல்லாரும் நீராடி விட்டு ஈர உடையுடன் ராக்காயி அம்மனை தரிசிக்க மிகவும் குறுகிய பாதையில் வரிசையில் வருகிறார்கள்.

நின்ற கோலத்தில் வெள்ளித் திருமுகம் அணிந்து ராக்காயி அம்மன் அருள்புரிகிறார். ரோஜாப்பூ மாலைகள் மற்றும் மதுரையின் சிறப்பு அம்சமான குண்டு மல்லிகைப் பூச்சரங்களை அணிந்து வீற்றிருக்கிறாள். சிறிய கோயில் சந்நதிக்கு விமானம் இல்லை. அம்மனிடம் தம் குறைகளைச் சொல்லி பக்தர்கள் வேண்டிக் கொண்டு, நம்பிக்கையுடன் சந்நதியை விட்டு நகருகின்றனர். வீட்டிற்குச் செல்லும்போது மறக்காமல் நூபுர கங்கையின் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு போய், வீட்டில் தெளிப்பதாகவும், வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்குப் பிரசாதமாகத் தருவதாகவும் சொல்கிறார்கள். நூபுர கங்கையில் நீராடி ராக்காயி அம்மனைத் தொழுதுச் சென்றால் மருத்துவர்களுக்கும் என்னவென்றே புரியாத பல உடல் கோளாறுகள் தீர்கின்றன என்பது பலரது அனுபவ நம்பிக்கையாக இருக்கிறது!

- இளங்கோவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்