SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தைப்பூசத் திருநாளில் திருமுருகன் தரிசனம்

2016-01-29@ 10:21:07

அருமருந்தாகும் அருட்பிரசாதம் (சென்னை சிந்தாதிரிப்பேட்டை)

சென்னை மாநகரில் சான்றோர்களின் சிந்தையில் வைத்து ஆதரித்த, இறைநேச செல்வர்கள் பலர் தங்கி இருந்தும், வாழ்ந்தும், வந்து சென்றும்  நல்வழிகாட்டிய பேட்டை ஒன்று உண்டு. அது - சிந்தாதிரிப்பேட்டை. ‘முருகவேள்’ என்று பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாஸ சுவாமிகளால் சிறப்புப் பெயர்  சூட்டப்பெற்று, முருகக்கடவுளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு முன்னாளில் திருப்போரூர் சிதம்பரஸ்வாமிகள், பிற்காலத்தில்  பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகள் ஆகிய மகான்கள், தற்போது அமிர்தகடேஸ்வரர் கோயில் இருக்கும் இடத்தில் நீண்ட காலம் தங்கி இருந்து தவம்  செய்து வந்திருக்கிறார்கள். பாம்பன் சுவாமிகளே இங்கு முருகப் பெருமானுக்கு உரிய கடம்ப மரம் வைத்து ‘தல விருட்சமாக’ அது வளர்ந்திருப்பதும்,  அருணகிரிநாதருக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்திருப்பதும் குறிப்பிடத்தகுந்தவை.

அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழ் சிலவற்றில் ‘சிந்தை நகர்’ என்று குறிப்பிடுவது இந்தக் கோயிலைத்தான் என்றும், காலப்போக்கில் வெள்ளையர்  ஆட்சி காரணமாக அந்த ஆதாரங்களும், சில பாடல்களும் மறைந்துவிட நேர்ந்ததாகவும், இப்பகுதிவாழ் பெரியோர்கள் கூறுவர். திருமுருக  கிருபானந்தவாரியார் சுவாமிகள் சிந்தாதிரிப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள் என்பதால் மிக அதிகமாக இந்த முருகனை வணங்கும் பேறு பெற்றதாக  அவரே கூறியதும் உண்டு. வள்ளி-தெய்வானை சமேதராக அற்புத அழகுத் திருமேனி கொண்டு விளங்குகிறார் முருகப்பெருமான். பாம்பன் சுவாமிகளால்  தனி பீடத்தில் விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஞானசக்திவேல், இந்த முருகப்பெருமான் உடலுடன் ஒன்றி விளங்குவது அபூர்வமான  காட்சியாகும். இந்த வேல் பீடத்தில் இருந்து அளிக்கப்படும் விபூதி திருவருள் பிரசாதம் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும், வினை தீர்க்கும் வல்லமை  உள்ளதாகவும், லட்சுமிகடாட்சம் அருளக்கூடியதாகவும் வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளுவதாகவும் திகழ்கிறது.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5 நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ள சித்தாதிரிப்பேட்டையில் தெற்கு ஐயா முதலித் தெருவில்  விளங்குகிறது இந்த முருகன் திருக்கோயில்.   

கணேசமுருகன் (கோவா)
 
கோவா மடுகான் ரயில்நிலையம் அருகில் ராவன்போண்டு என்ற இடத்தில் உள்ள ஒரு கோயிலில் முருகப் பெருமானின் மூலஸ்தானத்தின் அருகே  கணேசப் பெருமானும் கொலுவிருக்கிறார். இந்தக் கோயில் பெயர் கணேசமுருகன் கோயில்! இவ்வாறு பிரதான கருவறையில் கணேசனும் முருகனும்  இருப்பது அபூர்வமானது. பொதுவாகவே மகாராஷ்டிரம் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் சுப்பிரமணியர் பிரம்மசாரியாகவே கருதப்படுகிறார். ஆனால்,  விநாயகரோ, சித்தி-புத்தியரை மணந்த குடும்பஸ்தர்! ஆனால், இந்தத் தலத்தைப் பொறுத்தவரை முருகன் வள்ளியை மணந்து இல்வாழ்க்கையில்  ஈடுபட்டவர் என்பதை வள்ளி-முருகன் திருமண நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் தெரியப்படுத்துகிறார்கள். மிக அருமையான இந்த கணேசமுருகனை  கந்தசஷ்டியில் வணங்க மிகப்பெரிய பக்தர் கூட்டம் காத்து நிற்கிறது. இதில் தமிழர் அல்லாதவர்கள் 90 சதவீதம் பேர் என்பது ஆச்சரியமான தகவல்.

இனிய வாழ்வளிக்கும் இளையோன் (இலஞ்சி)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இலஞ்சி கிராமம். இங்கு இலஞ்சி குமரன் வள்ளி-தெய்வானையுடன் திருக்கோயில் கொண்டுள்ளார். இங்கிருந்து  திருக்குற்றாலம் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. அகத்தியர் பூஜை செய்ததும் அருணகிரிநாதரால் பாடப் பெற்றதுமான வரலாற்றுச் சிறப்புடையது இந்த இலஞ்சி  குமாரர் ஆலயம். காஸ்யப, கபில, துர்வாச முனிவர்கள் மூவரும் திரிகூடாசல மலையின் வடகீழ்த்திசையில் ஒருவரையொருவர் சந்தித்து பல தத்துவப்  பொருட்களின் நுணுக்கங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இவ்வுலகம் ‘உள் பொருளா இல் பொருளா’ என்ற வினாவும், ‘மும்மூர்த்திகளில் யார்  சிறந்தவர்’ என்ற வினாவும் எழுந்தன. அப்போது அம்மூவரும் உண்மை விளங்க முருகக் கடவுளை வணங்கினர். வலக்கரங்களில் வேலும், வரத  முத்திரையும் இடக்கரங்களில் அபய முத்திரையும், சேவல் கொடியுமாக அவர்களுக்குக் காட்சியளித்து அவர்களது ஐயப்பாட்டை தீர்த்தருளினாராம் முருகன்.

ஐயம் தீர்ந்த அம்முனிவர்களின் வேண்டுகோளின்படி குமரக்கடவுள் இத்தலத்தில் எழுந்தருளி வேண்டிய வரங்களை பக்தர்களுக்கு வழங்கலானார். அன்று  முதல் இவர் ‘வரதராஜகுமாரர்’ என்றும் அழைக்கப்பட்டார். மிகவும் பழமையான இந்த திருத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் ‘இலஞ்சியிலமர்ந்த  பெருமானே’ என்றும், ‘இலஞ்சி விசாகப் பெருமானே’ என்றும் பாடிப்பரவியுள்ளார். இத்திருத்தலம் திருக்குற்றாலத்துடன் தொடர்புடையது. தென்னிலஞ்சி,  பொன்னிலஞ்சி, மலரிலஞ்சி, திருவிலஞ்சி என்றெல்லாமும் வழங்கப்படும் இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி விழா தேர்த்திருவிழாவாக சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில் முதல் நாள் அயனாகவும், இரண்டாம் நாள் அரியாகவும், மூன்றாம் நாள் அரனாகவும், நான்காம் நாள்  மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் சதாசிவனாகவும், ஆறாம் நாள் வெள்ளி மயிலேறி சூரசம்ஹாரம் செய்யும் முருகனாகவும் அழகுக் காட்சியளிக்கிறார்.

ஏழாம் நாள் திருத்தேர் நடைபெறுகிறது. இந்த கந்த சஷ்டி விழாவை, திரிகூடராசப்பக் கவிராயர் தமது திருக்குற்றால குறவஞ்சியில் பாடியிருக்கின்றார். மகிழ மரம் இங்கு தல மரம். செண்பக மலர் சிறப்பு புஷ்பம். குற்றாலத்தில் நடக்கும் சித்திரை, ஐப்பசி  விஷு திருவிழாக்களுக்கு இலஞ்சி குமரன், வள்ளி-  தெய்வானையுடன் கொடியேற்ற நாளில் சென்று 10 நாட்கள் பவனி வந்து அங்கு தீர்த்தவாரி முடிந்ததும் இலஞ்சிக்கு திரும்புகிறார். அங்கிருந்து இவர்கள்  பிரியும்போது மேளதாளத்துடன் மக்கள் கூடி வழியனுப்புவது மனதை உருக்கும்; கண்களில் நீர் தளும்பும். தை மாத தெப்ப உற்சவத்திலும் இந்த இலஞ்சி  குமரன் விழா காண குற்றாலம் செல்கிறார்.

தென்காசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்திற்கு தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

கூர்வேல் பெருக்கிய நீரூற்று (கதித்த மலை)
 
அகத்தியர், முருகப் பெருமான் குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் யாத்திரை சென்றார். ஒருமுறை அகத்தியர் இந்த கதித்த மலைக்கு வந்தார்.  ஆண்டவருக்கு பூஜை, நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவர் முருகப் பெருமானை வேண்டிக்கொள்ள, முருகனும் காட்சி தந்து மலையில் தம்  வேலை ஊன்றி ஓர் ஊற்றை ஏற்படுத்தினார். உடனே நீர் பெருகிற்று. பெருமகிழ்ச்சியுடன் தம் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்ட அகத்தியர் தொடர்ந்து  சில நாட்கள் இத்தலத்தில் தங்கி முருகவேளை வழிபட்டார். முருகன் தன் கூர்வேல் கொண்டு உருவாக்கிய மலை ஊற்று, இன்றுவரை வற்றாமல் நீர்  வழங்கிக் கொண்டிருக்கிறது. தென் பிராகாரத்தில் தலவிருட்சமாக வில்வம் உள்ளது. அதனடியில் முருகப் பெருமான் அற்புத தரிசனம் தருகிறார். கிழக்கு  நோக்கி தென் மூலையில் கன்னிமூலை கணபதி உள்ளார்.

பிராகாரத்தில் கொடிமரம் கடந்து அலங்கார மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் என்ற ஆலய கட்டுக்கோப்பை கடந்தால், கருவறையில் வெற்றி  வேலாயுத பெருமான் அருள் கோலம் காட்டி ஆட்கொள்கிறார். வேலாயுதசாமிக்குப் பின்புறமாக வள்ளி, தெய்வானை இருவரும் தனித்தனி சந்நதிகளில்  வீற்றிருக்கிறார்கள். இடும்பன் சந்நதியும் அருகில் உள்ளது. சிவபெருமானும், பார்வதியும் மைந்தனின் கோபம் தணிக்க காளை வாகனத்தில் வந்ததற்கு  அடையாளமாக இன்றும் மலையின் வடசரிவில் பாறை ஒன்றில் காளையின் திருவடி பதிந்த தடம் உள்ளது. அப்பகுதியை மக்கள் சூலக்கல் என்று  அழைக்கிறார்கள்.  கொங்கு நாட்டின் சிறப்புப் பெற்ற கூனம்பட்டி ஆதீனத்தோடு தொடர்புடையது இக்கோயில்.

கதித்த மலை, ஈரோடு மாவட்டத்தில் திருப்பூர் அருகே அமைந்துள்ளது.

கவலைகள் களையும் கந்தவேள் (கந்தன்குடி)

கந்தன்குடி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம்-காரைக்கால், மயிலாடுதுறை-காரைக்கால் பேருந்து  வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்து கந்தன்குடியை அடையலாம்.அர்த்தமண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தேவசேனாவுடன் சுப்பிரமணியசுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். சொந்த ஊருக்கு வரும் தலைமகனை எத்தனை அன்பாக உபசரிப்போமோ அதுபோல கந்தனை சகல  உபசாரங்களோடும் அமர்வித்துள்ளனர். சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம் என வேளைக்கொரு அபிஷேகமும்,  அலங்காரமுமாக செய்து மகிழ்கிறார்கள். கருவறையை நெருங்கும்போது ஆனந்த ஊற்று அகத்தில் கொப்பளிக்கிறது. நாள்பட்ட துயரங்கள் எல்லாம்  தூசாகப் பறந்து போகின்றன. இந்த கந்தவேளை அருணகிரிநாதர் பரவசமாகப் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார்.
 
இக்கோயிலின் தலவிருட்சம் பன்னீர் மரமாகும். இதனடியில் தெய்வானை தவமிருந்தாள். இந்த ஆலயத்தில், காசியைப்போல விஸ்வநாதரும்,  விசாலாட்சியும் தனிச் சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர். கந்த புஷ்கரணி, கோயிலின் திருக்குளம். இதில் நீராடி கந்தனை வழிபடுவோர் மனதிலிருந்து  மாசுகள் கரைந்தோடும் என்கிறார்கள். பைரவர் சந்நதிக்கு எதிரேயுள்ள ஜன்னலில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து சொட்டிய தேனைச் சேகரித்து  மூலவருக்கு முன்னாளில் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். சிறிய ஆலயமானாலும், தொன்மையிலும், கீர்த்தியிலும், கந்தனின் புகழ்பாடுவதிலும்  ஈடிணையற்ற கோயில். கோயிலிலுள்ள ஒவ்வொரு தெய்வத் திருமேனியையும் மிக அழகாக அலங்கரிக்கிறார்கள்.    

குழந்தையைக் காத்த கந்தன் (காங்கேயநல்லூர்)

குன்றிருக்கும் இடமெலாம் குமரன் இருக்கும் இடம் என்பது தொன்மையான வழக்கு. ஆனால், நதிக்கரையிலும் புராதன முருகன் கோயில்  அமைந்திருக்கிறது. வேலூர் அருகே வேகவதி என்றழைக்கப்படும் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி  கோயில்தான் அது. இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. திருத்தணியில் வள்ளி - தெய்வானையுடன் காட்சி தரும் முருகனின் அதே தோற்றத்தை  ரத்தினகிரியிலும், காங்கேயநல்லூரிலும் காணலாம். மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது. விஜயநகர பேரரசு காலத்தில்  திருப்பணி செய்யப்பட்டுள்ளது. பிரார்த்தனை தலமான இந்தக் கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டி ஆண்டுதோறும் ஆடி மாத பரணி, கிருத்திகை மற்றும்  தை கிருத்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். கோயிலில் ஐந்து நிலை  ராஜகோபுரத்தை அடுத்து அழகிய கொடி மரம். அதையடுத்து அர்த்த மண்டபம். கருவறையில் மூலவர் வள்ளி-தெய்வானையுடன் அருளாட்சி செய்ய, சுற்றுப்  பிராகாரங்களில் விநாயகர், சிவன், அருணகிரிநாதர், தண்டபாணி மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் கொலுவீற்றிருக்கின்றனர். இக்கோயிலின் எதிரிலேயே  முருகனின் புகழை திக்கெட்டும் பரப்பிய திருமுருக கிருபானந்தவாரியாரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு ‘ஞானத்திருவளாகமாக’க்  காட்சியளிக்கிறது.

மூன்றுதலை முருகன்! (காசிபாளையம்)

முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இக்கோயில்  ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்டது. காசிபாளையம் என்ற சிற்றூரில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தில் அருள்பாலிக்கும் முத்து வேலாயுத சுவாமிக்கு  மூன்று தலைகள் மட்டுமே உள்ளன. மூன்று தலைகளும், ஆறு கரங்களும் உள்ள முருகன், தமிழ்நாட்டில் வேறு எங்குமே இருப்பதாகத் தெரியவில்லை!  இந்த முத்து வேலாயுத சுவாமிக்கு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், பெண்களால் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ‘சிவகிரி  குமரன் கரடு’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த மூன்று தலை முருகனின் ஆலயத்தில் மிகப் பழமையான, கல்லினால் ஆன வேலாயுதம் ஒன்று  காணப்படுகின்றது. இந்த வேலாயுதத்தின் மறுபக்கம் கல்வெட்டு உள்ளது.

இங்கு வந்து முருகனை வணங்குபவர்கள் இந்த வேலாயுதத்தையும் பயபக்தியோடு வணங்கிச் செல்கிறார்கள். இதனால் செவ்வாய் தோஷம் நீங்குவதாகச்  சொல்கிறார்கள். வாரந்தோறும் நடைபெறும் கோபூஜையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வந்து கலந்து கொள்கிறார்கள்.  தைப்பூசத் திருநாள் விழாவின்போது, 108 பால் குடங்களில் தூய பால் எடுத்து வந்து முத்துவேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் செய்வது கண்கொள்ளாக்  காட்சியாகும். திருமண தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இவ்வாலயம் திகழ்கிறது. ‘செய்வினை அகற்றும் மூன்று தலை முருகன்’ என்றே இந்த  முருகனை பக்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.

காத்தருள்வான் காத்துக்குளி முருகன் (ஊட்டி)

நீலகிரி மலைமேல் எண்ணற்ற கோயில்களில் குமரன் அருளாட்சி புரிந்து வருகிறார். அவற்றுள் கோத்தகிரி மலையில் காத்துக்குளி தண்டாயுதபாணி  சுவாமி திருக்கோயில் குறிப்பிடத்தக்கது. மணி, தட்டு, வேல், கத்தி, சங்கு என ஐந்து பொருட்கள் இருந்த இடத்தில் கொலங்கை, முள்ளி, ஜக்கலா,  நாசர்(கொடி), மாசிங்கை எனும் ஐந்து வகையான தெய்வீக மூலிகை மரங்கள் ஒரே இடத்தில் வளர்ந்துள்ளன. இம்மரங்கள் 100 வருடங்களுக்கு முன்னரே  தோன்றியவை. அங்கு கிடைத்த ஐந்து பொருட்களும் முருகனுக்குரிய அம்சங்களாக இருப்பதால் அங்கு முருகன் கோயில் அமைந்தது மிகப்  பொருத்தமானதே. சிறிய கோயிலாக இருந்தாலும் முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலின் முன்னே அழகிய  வேலைப்பாடுகளுடன் கூடிய கொடிமரம் நிற்கிறது. இத்தலத்தில் தைப்பூச திருத்தேர் உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி ஏழு நாட்கள்  விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது  கண்கொள்ளாக் காட்சியாகும்.

தைப்பூசத்தன்று மாலையில் தேர் திருவீதி உலா வரும். முருகனுக்கு கந்தசஷ்டி, கிருத்திகை, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் விழாக்களையும் வெகு  விமரிசையாக கொண்டாடுகின்றனர். காத்துக்குளி கிராமத்தவர்களின் பிரதான தொழில் விவசாயமும், பால் உற்பத்தியும்தான், பசு மாடுகள் கண்  திருஷ்டியால் நோய்வாய்ப்பட்டு, கறக்கும் பாலின் அளவு படிப்படியாக குறையும் சமயத்தில் ஆபத்பாந்தவராக துணை நிற்பவர் தண்டாயுதபாணி  தெய்வம்தான். ஆம். ஐந்து தெய்வீக மரங்களின் இலைகளைப் பறித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து அந்த நீரை அம்மாடுகளின் மடியில் தடவி  முருகனை வேண்டிக்கொண்டால் ஓரிரு நாட்களில் அவை குணமடைந்து, முன்பு போலவே இயல்பாக பால் தரத் தொடங்கிவிடுமாம். பொதுமக்களுக்கு  ஏற்படும் கண் திருஷ்டி போன்ற இடர்ப்பாடுகளில் இருந்து காப்பது இந்த மூலிகைச் செடிகளும், கந்தன் கருணையும்தான் என்கின்றனர் ஊர் பெரியவர்கள்.  குழந்தை இல்லாத தம்பதியினர் தொடர்ந்து குறிப்பிட்ட நாளில் விளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டு குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர்.  

கோத்தகிரி-ஊட்டி பிரதான சாலையில் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள காத்துக்குளி எனும் கிராமத்தில் அருளாளன் முருகனின் இக்கோயில்  அமைந்துள்ளது.

தடைகள் தவிடுபொடியாகும் (கொம்பநாயக்கன் பாளையம்)

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி, கொம்பநாயக்கன்பாளையம் பகுதியில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் முருகன் அவரது கனவில்  தோன்றி, ‘இந்த ஊரின் வடபகுதியில் உள்ள கானகத்தில் என் கால்பட்ட இடம் ஒன்று உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பி வழிபடு!’ என்று  கூறினார். அடுத்த நாளே ஆலயம் கட்டும் பணியில் இறங்கினார் குப்பண்ணன். அப்போதைய ஆங்கிலேயர் கெடுபிடி இருந்தது. குப்பண்ணனின் முயற்சிக்கு  இடையூறாக இருந்த ஆங்கிலேய அதிகாரிக்கு திடீரென பார்வை முற்றிலும் போய், உடல் அரிப்பும் ஏற்பட்டது. தன் தவறை உணர்ந்த அவர் குப்பண்ணனிடம் மன்னிப்பு கேட்க, அவரும் முருகனை மனமுருகி வேண்டிக் கொள்ள, அதிகாரியின் குறைகள் நீங்கின.  அவரே கோயிலுக்கு வரவேண்டிய மரச்சட்டங்களைப் பாதுகாப்பாகப் போய்ச் சேர உதவினார். அந்த பாலதண்டாயுதபாணி, இன்றும் பக்தர்களுக்கு நேரும்  தடைகளை எல்லாம் விலக்கி அவர்கள் வாழ்வில் இனிமை சேர்க்கிறார் - குறிப்பாக திருமணத் தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடைபெற வேண்டி  ஒவ்வொரு ஆண்டும் இங்கே ‘சுயம்வரா பார்வதி யாகம்’ நடத்தப்படுகிறது.

இதில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. யாக பூஜையில் கலந்து கொண்டால், பாலதண்டாயுதபாணி திருவருளால் திருமணம் 48  நாட்களில் நிச்சயமாகிறது என்கிறார்கள். ஒவ்வொரு வைகாசி 26ம் தேதியன்று கோயில் ஆண்டு விழாவை ஒட்டி சுயம்வரா பார்வதி யாகமும்  அன்னதானமும் நடத்தப்படுகின்றன. இங்கே தரப்படும் பிரசாதம் பல நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை பெற்றது. மனநோயாளிகளும் நலம்  பெறுகிறார்கள். வேலை மாறுதல் விரும்புகிறவர்களும் இங்கே வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள். யாக பூஜையில் கலந்துகொள்ள வருபவர்கள் கால்  கிலோ உதிரிப்பூவும், இரண்டு முழம் பூச்சரமும், ஓர் எலுமிச்சம் கனியும் கொண்டு வருகிறார்கள். ஜாதகத்தை இறைவனின் காலடியில் வைத்து எடுத்துச்  செல்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் அருகே டி.ஜி.புதூர் சாலையில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

முருகன் பாதம் : (கிணத்துக்கடவு)

கோவை மாநகரின் தென்திசையில் உள்ள கிணத்துக்கடவு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று, ‘பொன்மலை’. இம்மலையில் முருகனின்  திருப்பாதங்கள் பதிந்துள்ளன. பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தன மரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது. இம்மலையில் பொன்  விளைந்ததாலேயே பொன்மலை எனப் பெயர் பெற்றது. கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார், ஆண்டுதோறும் தைப்பூசத்  திருவிழாவிற்கு பழநி சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து வருவார். அவர் கனவில் பழநி ஆண்டவர் தோன்றி, ‘வடக்கே செல்லும் பாதையில்  ஒரு குன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் சந்தன மரமும் அதன் அடியில் பொன்னும் உள்ளன. அருகே என் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அங்கே வந்து  என்னைத் தரிசிக்கவும்,’ எனக் கூறினார். அதன்படி கோப்பண மன்றாடியார் அத்திருப்பாதங்களுக்கு பூஜையும் உற்சவமும் நடத்தி வந்தார்.  இந்நிலையில்தான் மைசூர் மகாராஜா ஆணைப்படி திருக்கோயிலும் கட்டப்பட்டது. மைசூர் திவான் ஊர் திரும்பும்போது கோயில் நிர்வாகத்தை கோப்பண்ண  மன்றாடியார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

இன்றுவரை இப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் கோயில் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர். இக்கோயிலில் குடிகொண்டுள்ள வேலாயுத  சுவாமியை அருணகிரிநாதப் பெருமான் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார். பிரதான கோயிலின் வடகிழக்குப் பகுதியில் என்றும் வற்றாத வள்ளி சுனை (தீர்த்தம்)  உள்ளது. தினசரி அபிஷேகத்திற்கு இந்த தீர்த்தம்தான் பயன்படுத்தப்படுகிறது. திருக்கோயிலின் முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.  கோயிலின் உள்ளே, வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பிலும் வைத்தபடி அற்புத  கோலம் காட்டுகிறார். ராஜா, வேடன் என்று இரு அலங்காரங்களில் முருகன் காட்சிதரும் ஒப்பற்ற அழகை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  பிரதான சந்நதியின் தென்பகுதியில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சந்நதிகள் அமைந்துள்ளன. கோயிலின் பின்புறம் முருகன் பாதம் பதிந்த  பகுதியை ஒரு சந்நதியாக அமைத்துள்ளனர்.
 
கோவை-பொள்ளாச்சி பாதையில் கோவையிலிருந்து 13வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது, கிணத்துக்கடவு.

சுகமான வாழ்வருளும் சுவாமிநாதன் (குமரன் குன்றம்)

சென்னை குரோம்பேட்டை அருகிலுள்ள குமரன் குன்றம் முருகன் கோயிலின் ராஜகோபுரத்திற்கும் விநாயகர் சந்நதிக்கும் இடையில் கம்பீரமாக மண்டபம்  ஒன்று உள்ளது. இப்புதிய மண்டபம் வழியாக சென்று மலையடிவாரத்தின் தென் புறத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் தனிக் கோயிலாக அமைந்துள்ள   சித்தி விநாயகர் சந்நதியையும், வடபுறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட  வள்ளி தேவசேனா சமேதராக ஷண்முகர் சந்நதியையும் தரிசிக்கலாம். ஷண்முகர்,  தன் மாமனைப் போன்று சங்கு, சக்ரதாரியாக காட்சியளிப்பது மற்றொரு சிறப்பாகும். மலை ஏற முடியாதவர்கள் முருகப் பெருமானை  அடிவாரத்திலிருந்தபடியே வழிபடலாம். மலையடிவாரத்தின் தெற்கில் நவகிரகங்களுக்கு தனிக்கோயில் உள்ளது. சற்று மேலே சென்றால் புதிதாக இடம்  மாற்றம் செய்யப்பட்ட தனிச்சந்நதியில் இடும்பனை வணங்கலாம்.

மகா மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஒரு கையில் தண்டம் ஏந்தி, மற்றொரு கரத்தை தொடையில் வைத்தவாறு இரு திருக்கரங்களுடன் சுவாமிநாத  ஸ்வாமி உற்சவரையும் அவருக்கு எதிரில் அமர்ந்த நிலையில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட அருணகிரிநாதரையும் தரிசித்து உள்ளே சென்றால்  கருவறையை அடையலாம். கருவறையினுள்ளே முருகப்பெருமான்  சுவாமிநாத ஸ்வாமி என்ற திருப்பெயருடன் வடக்கு நோக்கிய வண்ணம் நின்ற  கோலத்தில் காட்சி தருகின்றார். வலது திருக்கரத்தில் தண்டம் தாங்கியும் இடது திருக்கரத்தை இடது தொடையைத் தொட்ட வண்ணமும் (ஊருஹஸ்தம்)  ஊர்த்துவ சிகை மேல் நோக்கியும் பூணூல் கௌபீனம் தரித்தும் கம்பீரமாக புன்முறுவலுடன் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அழகன் முருகனின் அற்புத  தரிசனம் கண்டு மன நிறைவு கொள்ளலாம்.

- ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்