SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவி அமைவதெல்லாம்..?

2016-01-21@ 14:45:13

சிறுகதை

நீலாயதாட்சனுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல மனைவி நாராயணி அவர்களுக்கு விருந்தோபசாரம் செய்தாள். வந்தவர்கள் பொதுவாகப் பேசுவதைவிட நீலாயதாட்சனுடைய அசாத்திய திறமையைப் பாராட்டிப் பேசுவதை விரும்பிச் செய்தார்கள். ரொம்பவும் பெருமிதமாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் அவன். நெஞ்சில் கர்வமும் ஏறியது. அவர்கள் புகழப் புகழ, வானில் மிதக்கும் கிறக்கம் கொண்டான். ஆனால், விரைவில் காட்சி மாறியது. சிற்றுண்டிகளுக்குப் பிறகு நிறைவாக மண மணக்கும் காபியை அவர்களுக்குக் கோப்பைகளில் வழங்கினாள் நாராயணி. ‘‘உங்க வீட்டுக்கு வர்ரதானா சாரோட பாட்டைக் கேட்கவும், உங்களோட டிபனை சாப்பிடவும்தான் வரணும். ரெண்டுமே சூப்பர் டேஸ்ட்!’’ என்று பொதுவாகப் பாராட்டினார் ஒருவர்.

‘‘ஆனா, நமக்கு மேடம்கிட்டேயிருந்து டிபன் கிடைக்கும்; சார்கிட்டேயிருந்து ஒரு பாட்டு பாடக் கேட்குமா?’’ என்று இன்னொருவர் சற்றே ஏக்கத்துடன் சொன்னார். ‘‘அதுசரி, நமக்குப் பாடற நேரத்ல ஏதாவது சபாவிலே, இந்த சீஸன்ல பாடினார்னா அவருக்கு ஆயிரக்கணக்கிலே வருமானம் வரும்…’’ என்று இழுத்தார் மூன்றாமவர். மெல்ல சிரித்தான் நீலாயதாட்சன். இவர்களுக்காக ஒன்றிரண்டு சங்கதிகளைப் பாடுவதில் அவனுக்குத் தயக்கமில்லைதான். ஆனால், உறவினரே சொன்னது போல விழலுக்கு இறைக்க வேண்டுமா என்று யோசித்தான். ஆனால், ஒரு உறவினர், ‘‘மேடம், நீங்க ரொம்பப் பிரமாதமா  காபி போடறீங்க. அதன் மணம் மூக்கைவிட்டும், ருசி நாக்கைவிட்டும் நீங்கமாட்டேங்குது. அதேபோல சாரோட காபி ராகப் பாட்டும் அதிஅற்புதம்; காதை விட்டும், மனசை விட்டும் நீங்கமாட்டேங்குது.

உங்களுக்குக் காபி போடத் தெரியும், காபி ராகம் தெரியுமா?’’ என்று கேட்டபோது நாராயணி வெட்கத்தால் முகம் சிவந்தாள். ‘‘அதெல்லாம் இவரோட டிபார்ட்மென்ட். எனக்கு அதெல்லாம் தெரியாது,’’ என்று வெகுளித் தனமாக உண்மையை உரைத்தாள். உறவினர்கள் நீலாயதாட்சனை சற்றே கேவலமாகப் பார்த்தார்கள். ‘என்னய்யா மகாப் பெரிய பாடகன் நீ. உன் மனைவிக்கு ஒரு ராகம் பற்றித் தெரியவில்லை,’ என்பதுபோல இருந்தது அந்தப் பார்வை. இதனால் ரொம்பவும் தர்மசங்கடத்துக்குள்ளானான் அவன். அவளுக்கு சங்கீதம் பற்றி ஒன்றும் தெரியாது என்று அவர்கள் முன்னால் ஒப்புக்கொள்ள அவனுக்கு வெட்கமாக இருந்தது. பெண் பார்த்தபோது பெண் பார்ப்பதற்கு லட்சணமாக, ஆரோக்கியமாக இருக்கிறாள், அதிக உறுப்பினர் இல்லாத, பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம், வசதிகளுக்குக் குறைவில்லை என்ற ப்ளஸ் பாயிண்டுகள் அவளை மருமகளாக அங்கீகரிக்க முக்கிய காரணங்களாக இருந்தன.

அதோடு, அப்போது நீலாயதாட்சன் சங்கீதம் பயின்று கொண்டிருந்தான், ஓரிரு தேங்காய் மூடிக் கச்சேரிகள் செய்திருக்கிறான் என்பதைத் தவிர அவன் சங்கீதத்தோடு நெருங்கி உறவாட ஆரம்பிக்கவில்லை. ஆனால், ‘மாப்பிள்ளை பெரிய சங்கீத வித்வான்’ என்று அவனுடையை நிலையை அப்போதைக்குத் தகுதியற்றதாக இருந்தாலும், பெண் வீட்டார் புருவங்களை உயர்த்தி வியந்தபோது அதைப் பெருமையாக ஏற்றுக்கொண்டான் நீலாயதாட்சன். கூடவே மனசுக்குள் சிறு நெருடல்.‘இந்தப் பெண்ணுக்கும் பாட்டு வருமோ, பாடுகிறாளோ, என்னைவிட நன்றாகப் பாடக்கூடியவளோ என்ற கேள்விகள் எழுந்தன. அவனுடைய அம்மாவுக்கோ தன் பையனை சங்கீத வித்வானாகவே சம்பந்தி வீட்டார் வர்ணித்ததில் அசாத்திய பெருமை, கர்வம்.அந்த ஹோதாவில், ‘பெண்ணுக்கு சங்கீதத்ல எவ்ளோ நாட்டம்?’ என்று கேட்டாள்.

நாராயணியின் தாய், ‘அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. இவ சினிமா பாட்டை முணுமுணுத்துக்கூட நாங்க கேட்டதில்லே. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை தயவால அந்த ஆர்வம் வருமோ என்னவோ!’ என்று குற்ற உணர்வுடன், கொஞ்சம் அவமானப்பட்டாள். ஜாதகங்கள் அற்புதமாகப் பொருந்தியிருக்கின்றன என்ற ஜோசியரின் உத்தரவாதத்தின் பேரில் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. தோற்றத்தில் தனக்கு இணையான அழகுடன் மனைவி விளங்கியதில் அவனுக்கு சந்தோஷம்.அவளுடைய அடக்க உணர்வு அவனை பிரமிக்க வைத்தது. நிரந்தரமான அந்த சந்தோஷப் புன்னகை அவனைப் புது உற்சாகம் கொள்ள வைத்தது. பட்டப் படிப்புப் படித்திருந்தாள். ஆனால், வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆர்வம் இல்லை. இது நீலாயதாட்சனுக்கு மிகவும் பிடித்துப்போன ஒரு குணமாக இருந்தது.

அவனைப் பொறுத்தவரை மனைவி தன்னைச் சார்ந்திருக்க வேண்டும், அவளைத் தான் பராமரிக்க வேண்டும்; தன் நிழலில் அவள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கருதியிருந்தான். அந்த அவனுடைய கொள்கைகளுக்குப் பொருத்தமாக அவளுடைய மனநிலை இருந்ததும் அவனுக்குப் பிடித்துப்போயிற்று. சிறுசிறு கச்சேரிகள் செய்துகொண்டிருந்த அவன், தன்னுடைய ஆழ்ந்த ஈடுபாட்டால், அசுர சாதகத்தால் முன்னணிக்கு வந்தான். டிசம்பர் ஸீஸனில் சபாக்காரர்களைப் போய்ப் பார்த்து வெறும் நாற்காலிகள் முன்னால் மதிய ஒரு மணிநேர கச்சேரிக்கு வாய்ப்புகள் பெற்றான். கொஞ்சம் முன்னேறி மாலை நேரங்களில் பிரபல வித்வான்கள் பாடும் 7 மணி கச்சேரிக்கு முன்னால் 6 மணி கச்சேரியிலும் இடம்பிடித்தான். இந்த முன்னேற்றத்தில் மேடைக்கு முன்னால் நாற்காலிகளில் ஆங்காங்கே ரசிகர்கள் அமர்ந்திருந்ததையும், மற்றவர்கள் அந்த சபா காண்டீனை ஆக்கிரமித்திருந்ததையும் கொஞ்சம் நெஞ்சில் வலியுடன் கவனித்தான்.

ஆனாலும், ஆறுதல் - இந்த சில ரசிகர்கள்! தனக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் கலைஞர்கள்,அரங்கில் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ, தங்களுடைய முழு திறமையையும் கொட்டக் கூடியவர்கள்.வெற்று நாற்காலிகளைப் பார்த்து அதுவே ஏக்கமாக மாறி அவன் சக கலைஞர்களைப் பார்ப்பான். மிருதங்க வித்வான் அவனை நகைச்சுவையாக உற்சாகப்படுத்துவார்: ‘‘கவலைப்படாதீங்க. அதெல்லாம் ரசிகர்கள்தான். நாற்காலி வேஷம் போட்டுகிட்டு உட்கார்ந்திருக்காங்க.’’ அந்த ஆறுதலால் கண்களில் துளிர்க்கும் நீரை உள்ளுக்குள்ளேயே அடக்க அவன் முயற்சிக்கும்போது, வயலின் கலைஞர் சொல்வார்: ‘‘இதெல்லாம் வெறும் நாற்காலிகள் இல்லை சார், ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னதுபோல இந்த ஜடப்பொருட்களுக்கு உயிர் இல்லாமல் இருக்கலாம், ஆனா, உணர்வுகள் உண்டு சார். நீங்க வேணா பாருங்க, உங்களோட அற்புதமான சங்கீதத்தால இந்த மர நாற்காலிகளும் துளிர்க்கும், ஆமா….’’ இதைவிட வேறு என்ன ஊட்டச்சத்து ஒரு கலைஞனுக்கு வேண்டும்!

தலையை சிலுப்பி விட்டுக்கொண்டு ஸ்வரங்களில் மூழ்கினானால் அவன் உலகையே மறந்துவிடுவான். மிகக் கச்சிதமான தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடியும் தருவாயில், அவன் ‘பவமான….’ என்று மங்களத்தை ஆரம்பித்தானானால் அந்த நாற்காலிகளே கைகளைத் தட்டுவதுபோன்ற பிரமைக்கும் ஆளாவான். மிருதங்கம், வயலின், கஞ்சீரா, முகர்சிங், தம்பூரா கலைஞர்கள் எல்லாம் அவனை ஆரத் தழுவாத குறையாகத் தம் பாராட்டுகளைத் தெரிவிக்கும்போது அப்படியே உருகிவிடுவான். ‘எங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவும் உரிய சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தீர்களே, நன்றி,’ என்று அவர்கள் தனித்தனியே அவனிடம் தம் அன்பைத் தெரிவிக்கும் போது ‘நீங்களில்லாமல் என்னால் இப்படித் தனித்து இயங்கியிருக்க முடியுமா?’ என்று கேட்டு நெகிழ்வான். மனம் நிறைய பாராட்டுகளையும், சந்தோஷத்தையும் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருவான். நாராயணியிடம் நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் சொல்வான்.

‘அட, அப்படியா!’ என்று கேட்டு வியப்பாள் அவள். அந்த வியப்பில் நிறைவில்லையோ, இன்னும் கொஞ்சம் வியக்கமாட்டாளா, இன்னும் விவரித்துச் சொல்லும்படி கேட்கமாட்டாளா என்றெல்லாம் ஏங்குவான் நீலாயதாட்சன். அவளோ, ‘‘மதியம் சாப்டுட்டுப் போனதுதானே, புகழெல்லாம் மனசை நிறைச்சிருக்கும், வயிறு காலியாகத்தானே இருக்கும், வாங்க, சாப்பிடுங்க,’’ என்று சொல்வதோடு நேராக சமையலறைக்குள் புகுந்துவிடுவாள். அவன் வரக்கூடிய நேரத்தை உத்தேசமாகக் கணித்து அதற்கேற்றார்போல சூடாகத் தான் தயார்பண்ணி வைத்திருக்கும் உணவுப் பொருட்களை டைனிங் டேபிளில் பரத்தி வைப்பாள். உடனே அங்குள்ள மின்விசிறியை சுழலவிடமாட்டாள். அவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு சாப்பிட வர நாலைந்து நிமிடங்கள் ஆகலாம், அதற்குள் மின்விசிறி உணவின் சூட்டைக் குறைத்து சுவையையும் குறைத்துவிடும்!

லேசாக அலுப்புத் தட்டும் நீலாயதாட்சனுக்கு.இவளுக்கு சங்கீத ஞானம் இல்லாமலேயே போகட்டும், ஆனால், கணவனின் ஆர்வத்தை விசிறிவிடும் வகையிலாக அவள், ‘அப்படியா, யாரெல்லாம் பாராட்டினாங்க, யாரெல்லாம் பொன்னாடை போர்த்தினாங்க, யாரெல்லாம் கச்சேரிக்கு உங்களை புக் பண்ணினாங்க…’ என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு மறைமுகமாகத் தன்னுடைய பெருமையை ஒலிப்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோவான். தன் வயிற்றையும், உடல் நலத்தையும் அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் அவளால் தன் குரலையும், சங்கீத ஞானத்தையும் போற்றிப் பாராட்டத் தெரியவில்லையே என்ற மனவிலகலின் ஆரம்பம் தோன்றியது. புகழ் பரவ பரவ அவனுக்கான வாய்ப்புகள் வீட்டு வாசலில் வரிசைகட்டி நின்றன. அவனுக்கு சௌகரியப்படும் நாளில், நேரத்தில் கச்சேரியை வைத்துக்கொள்ள ஏற்பாட்டாளர்கள் முன்வந்தார்கள்.

சிறுவீட்டிலிருந்து பங்களாவுக்குக் குடிவந்தான் நீலாயதாட்சன். நவநாகரிக வசதிகள், கார்கள் என்று சொகுசு அதிகரித்தது. அவன் தலையிலும் கனம் சேரத்தொடங்கியது. பிரமாண்டமான பூஜையறை, அந்த வீட்டையே பக்தி மணம் கமழ வைத்தது. வீட்டைப் பளிச்சென்று பராமரிப்பதும், தினசரி பூஜைகளை சாஸ்த்ரோத்தமாக அனுசரிப்பதும் அவளுடைய கடமைகளாயிற்று. ஆனால், சமையலறையையும் தன் ஆதிக்கத்துக்குள்ளேயே அவள் வைத்துக்கொண்டது,  அவளுடைய அடிப்படை இயல்பைக் காட்டியது. தானே உணவு தயாரித்து, தன் கைகளாலேயே கணவனுக்குப் பரிமாறும் வழக்கத்தை மட்டும் அவள் எந்த மாதாந்திர சம்பள சமையல்காரிக்கும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. கச்சேரி, பெரிய மனிதர்கள் சந்திப்பு, சாதகம் என்று நீலாயதாட்சனின் நேரம் வெகுவாகக் கரைந்தது. வீடு, மனைவி, அவள் அளிக்கும் சாப்பாடு என்பதெல்லாம் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால், அவன் மனசை ‘மனைவிக்கு சங்கீதம் தெரியவில்லை’ என்ற உண்மை கூர்வாளாக அறுத்தது.

நாராயணியும் முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டவில்லை - அகத்தில் இருந்தால்தானே முகத்தில் தெரிவதற்கு! ஆனால், கணவன் சரியாக சாப்பிடுவதில்லை, முறையாக ஓய்வெடுப்பதில்லை என்பதில் அவளுக்கு உள்ளார்ந்த வருத்தம்தான். இடையிடையே கணவன் தனக்கு இசையில் பூஜ்ய ஞானம் என்பதைக் குத்திக்காட்டும்போது மனசு லேசாக வலிக்கும்; ஆனால், அதுவும் சமையலறைப் பெருங்காய வாசனையில் கரைந்துபோகும். தனக்கு புகழும், வாய்ப்புகளும் கூடக்கூட மனைவியின் ஞான வறட்சி பெரும் கௌரவக் குறைச்சலாகப் பட்டது நீலாயதாட்சனுக்கு.தன் அருமை பெருமைகளை அவளிடம் விரிவாகப் பேசி அவளுடைய பாராட்டுதல்களையும் பெற அவன் செய்த முயற்சிகள் எல்லாமே அவன் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. ஆரம்பத்தில் இந்தக் குறையை மறைமுகமாக வெளிப்படுத்திய அவன், நாளாக ஆக நேரிடையாகவே சொல்லி சித்ரவதை செய்தான்.‘எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கியே!’ என்ற அளவுக்கும் போய்விட்டான்.

ஒரு கட்டத்தில் இவளை விலக்கி வைத்தால் என்ன என்று சிந்திக்கவும் அவன் முற்பட்டான்.தன்னுடைய அந்தஸ்துக்கு ஒத்துவராத அவளுடன் வாழ்வதைவிட, அதனால் பிரமுகர்களிடமும், ரசிகர்களிடமும், வீட்டிற்கு வருபவர்களிடமும் அவமானப்படுவதை விட, அவளுடனான உறவைத் துண்டித்துவிட்டால், இந்தக் குறையும் இல்லாமல் தன் புகழ் வளர்ச்சியை உயர்த்திக்கொண்டே போகலாம்… இந்த தன் குறையை அதுவரை தன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த தன் நண்பனிடம் முறையிட்டான். அவனுக்கு மனைவி மீது இதுவிஷயமாக வெறுப்பு இருக்கிறது என்பது நண்பனுக்குத் தெரியும். ஆனால், அவளை விலக்கி வைக்கும் அளவுக்குப் போகும் என்று இவன் எதிர்பார்க்கவேயில்லை. ‘‘நீலா, ஒரு உண்மையை நீ மறந்திட்டே. உன் கல்யாணத்துக்கு அப்புறம்தான் உன் சங்கீதத்தில் இந்த உயரம் உனக்குக் கிட்டியிருக்கிறது. இது நிச்சயம் உன் மனைவி வந்த வேளைதான்.அவளுடைய அதிர்ஷ்டம்தான்.

உன் மனைவிக்கு சங்கீதத்தில் ஆர்வம் இல்லை என்பது உன் திருமணத்துக்கு முன்னலேயே தெரியும்.அப்படியும் நீ அவளை மணந்துகொண்டாய். ருசியாக சமைக்கத் தெரிந்த அவளுக்கு ரசனையாக சங்கீதத்தை அனுபவிக்கத் தெரியாதது உனக்குப் பெரிய குறையாக இருக்கிறது. உனக்குச் சமமாக இல்லாவிடினும், அவள் உன்னுடன் சங்கீதத்தை விவாதிக்கவேண்டும், உன் திறமையை விமர்சிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். அந்த ஆற்றல் அவளுக்கு இல்லாததால் அவள் உனக்கு இணை இல்லை என்று கருதி இப்போது அவளிடமிருந்து விலக விரும்புகிறாய்….’’ என்று பலவாறு தேற்ற முயன்றான். ஆனால், நீலாயதாட்சன் ஆறுதல் அடையாததை, அடைய விரும்பாததை நண்பன் புரிந்து கொண்டான். உடனே, ‘‘நான் மட்டுமல்ல, உன் குடும்பத்தார் மற்றும் உன் மனைவியின் குடும்பத்தார் எல்லோருமே அவள் வந்த ராசிதான் உனக்கு உச்சாணிக் கொம்பு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று நம்புகிறோம். இப்போது நீ அவளைவிட்டு விலகுவதானால் உன் கீர்த்தி மங்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது...’’

அலட்சியமாக சிரித்தான் நீலாயதாட்சன்.‘‘எனக்கு அப்படித் தோன்றவில்லை. என் திறமை, சொந்த உழைப்பு, மற்றும் உன் மொழியில் சொல்வதானால் என் ஜாதக பலத்தில்தான் என் முன்னேற்றம் உருவாகியிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்…’’ ‘‘உன் திறமை, உழைப்பில் எனக்கு எந்த
சந்தேகமும் இல்லை. ஆனால், உன் மனைவியின் ஜாதக விசேஷமும் முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன்,’’ என்ற நண்பன் தன் வாதத்தை நிரூபிக்க நீலாயதாட்சனை பிரபல ஜோசியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றான். ஜோசியர் பளிச்சென்று சொன்னார்: ‘‘நிச்சயமாக உங்கள் மனைவியின் ஜாதக அம்சம்தான் உங்களுடைய இந்தக் கீர்த்திக்குக் காரணம். ஏன் சொல்கிறேனென்றால், உங்கள் ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் எதிர்மறையாக அமைந்திருப்பதால் உங்களுக்கு ஆணாதிக்க அகம்பாவம் நிறைய உண்டு. உங்களைவிட உங்கள் மனைவி உங்களுக்குத் தெரிந்த கலையில் சற்றே தேர்ச்சிப் பெற்றிருந்தாரானால் அதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

அதேபோல உங்கள் மனைவி ஜாதகத்தில் சுக்கிரனும், சந்திரனும் எதிர்மறையாகச் செயல்படவில்லை. அப்படி செயல்பட்டிருந்தால் ஒருவருக்கொருவர் தொழில் பொறாமை, ஏற்பட்டிருக்கும். அவள் சொல்லக் கூடிய விமர்சனங்களை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது போயிருக்கும். கோபம், பொறாமை, வாக்குவாதம், சந்தேகம், சண்டை, அடிதடி, ஊர் ஏளனம், விவாகரத்து என்ற அளவுக்கு உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து சறுக்கல்கள ஏற்பட்டிருந்திருக்கும்.நல்லவேளையாக நீங்கள் இந்தப் பெண்ணை மணந்திருக்கிறீர்கள். உங்களுடைய எல்லா தாழ் குணங்களுக்கும் தன்னை அனுசரித்துக்கொண்டு, மலர்ச் சிரிப்புடன் உங்கள் வளர்ச்சியில் தன்னையறியாமலேயே தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்திருக்கிறாளே, இவளை மனைவியாக நீங்கள் அடைந்தது நீங்கள் செய்த புண்ணியம்.’’ நீலாயதாட்சன் விட்டப் பெருமூச்சு மானசீகமாக தன் மனைவியிடம் அவன் மன்னிப்பு கேட்டதை வெளிப்படுத்தியது. கண்களாலேயே நண்பனுக்கும் நன்றி சொன்னான் அவன்.

பிரபுசங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • adayaru_makkal_kumbha1

  அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

 • oranguttan_monkey111

  50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

 • malai_vangam11196

  196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 • amerikaa_aathal11

  900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

 • 20-06-2019

  20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்