SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தைப்பூச திருத்தலங்கள்

2016-01-20@ 14:46:19

தைப்பூசத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். அன்று வீட்டில் தனி பூஜை செய்து கந்தனை ஆராதனை செய்பவர்களும் உண்டு; முருகன்  தலங்களுக்குச் சென்று வழிபடுபவர்களும் உண்டு. இந்த தைப்பூச நாளில் சென்று வழிபடக்கூடிய சில கோயில்கள், இங்கே, உங்கள் தரிசனத்துக்காக...

திருப்புடைமருதூர்

மருத மரத்தை தலமரமாகக் கொண்ட தலங்களில் தெற்கே உள்ளது, திருப்புடைமருதூராகும். இதனை வடமொழியில் புடார்ஜுனம் என்பார்கள்.  அர்ஜுனம் என்றால் மருத மரம் என்று பொருள். அம்பாசமுத்திரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தலம். கலை எழில் ததும்பும் ஓவியங்களும்  சிற்பங்களும் நிறைந்த கோயில். சுவாமி நாறும்பூநாதர். அம்பாள் கோமதியம்பாள். தீர்த்தம் தாமிரபரணி ஆறு. இந்த ஆலயத்தில் சூரியன், வன்னி  விநாயகர், சனீஸ்வரன், சரஸ்வதி, ஸஹஸ்ரலிங்கம் ஆகிய சந்நதிகளும் அமைந்துள்ளன. பிரம்மஹத்தி தோஷத்தால் பெரிதும் துன்பப்பட்ட இந்திரன்  இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்தான். ஈசன் அவனுடைய தவத்திற்கு மெச்சி இத்தலத்தில் மருத மரத்தின் கீழ் அவனுக்குக் காட்சி தந்து பிரம்மஹத்தி  தோஷத்தை நீக்கியருளினார் என புராணங்கள் கூறுகின்றன. கும்பகோணம் மகாமகம் போல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு பூசமும்  விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

திருக்குற்றாலம்

அமாவாசையன்றும் தைப்பூசத்தன்றும் தீர்த்தவாரி நடைபெறும் திருத்தலம் திருக்குற்றாலம். இறைவன் குற்றாலநாதர். இறைவி  குழல்வாய்மொழியம்மை. தலமரம் குறும்பலா, தீர்த்தங்கள் சிவமதுகங்கை, வடஅருவி. உள்ளன்புடன் எவர் குற்றாலநாதரை வணங்குகின்றாரோ அவர்  ஜீவன் முக்தராகிறார். அகத்திய முனிவர் திருமாலைக் குறுக்கி சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்தார். அவருடைய கை பதிந்த வடு லிங்கத்தில்  காணப்படுகிறது. அதனால் விசேஷமான தைலக் காப்பினை அவருக்கு செய்கிறார்கள். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் வடக்கு திசையில்  குற்றாலநாதரின் இடப்புறத்தில் ஞானசக்தியாக இலங்குகிறாள் அம்பிகை. பிற தலங்களில் அம்பிகையின் சந்நதியில் பீட சக்தி இருக்கும். இங்கு பீடமே அம்பிகையாக விளங்குகிறது. அப்பீடம் சிவாலய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நடராஜரின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை,  ஆலயத்தின் வடபுறம் உள்ளது. உமையம்மை மட்டும் தரிசிக்க சிவன் ஆடிய திரிபுரதாண்டவம் இங்குதான் நிகழ்ந்தது. அத்திருக்கூத்து, மகாபரம ரகசியம் எனப்படுகிறது. தைப்பூசத் திருவிழா மகோன்னதமாக நடைபெறும் கோயில் இது.

திருவிடைமருதூர்


காவிரிக் கரையோரம் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்களில் சிறப்பிடம் பெறுவது திருவிடைமருதூர். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட  கோயில்கள் மூன்று: வடக்கே மல்லிகார்ஜுனம் என்ற ஸ்ரீசைலம், இடையில் இடைமருதூர் எனும் மத்யார்ஜுனம், தெற்கே தாமிரபரணிக்கரையில் திருப்புடைமருதூர் எனும் புடார்ஜுனம். திருவிடைமருதூரிலே உள்ள இறைவன் மகாலிங்கம். அம்பாள் பெருநலமாமுலையம்மன். தலமரம் - மருதம். தீர்த்தம் - காருண்யாம்ருத தீர்த்தம். இங்குள்ள 32 தீர்த்தங்களில் ஒன்று கல்யாண தீர்த்தம் எனப்படும் காவிரிப்படித்துறை. அதன் தேவதை  மத்யார்ஜுனேஸ்வரர். அதில் புனித நீராடுபவர்கள், எல்லா மங்களங்களும் பெறுவார்கள். முக்தியையும் அடைவார்கள். இங்கு தைப்பூசத்தன்று நீராடுவது  சிறப்பாகக் கருதப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் தனித்தனியாக லிங்கங்கள் நிறுவி பூஜை செய்த சிறப்பு பெற்ற தலம் இது. பூச நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் மட்டுமின்றி அனைவருமே பூச தீர்த்தவாரியின் போது இத்தல காவிரியில் நீராடினால் அவர்கள் தோஷங்கள் தொலைவது உறுதி.

திருநெல்வேலி

திருநெல்வேலி என்று இந்நாளில் அழைக்கப்படும் பெருநகரம் வேணுவனம், தென்காசி, சாலிவேலி என அந்நாளில் வழங்கப்பட்டது. தாமிரபரணி  ஆற்றங்கரையில் கோயில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு லிங்கமான நெல்லையப்பர் எனும் வேணுவனேஸ்வரர். அம்பாள் காந்திமதியம்மன்.  தலவிருட்சம் மூங்கில். இங்கே 32 தீர்த்தங்கள் உள்ளன. கோயிலுக்கு உள்ளே நான்கு தீர்த்தங்களும் கோயிலுக்கு வெளியே ஐந்து தீர்த்தங்களும்  உள்ளன. நான்கு வேதங்களும் ஒரு சமயம் சிவபெருமானிடம், ‘‘நாங்கள் ஒரு மரமாய் நின்று நிழல் தர, அதனடியில் நீங்கள் நிரந்தரமாய் எழுந்தருளவேண்டும்’’ என வேண்டின. அதன்படியே ஈசன் இங்கு நிலைகொண்டார். திருமால், பிரம்மா, அகத்தியர் ஆகியோர் பூஜித்த தலம்.  அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சியை இங்கு அருளினார். தசரதராமன் வணங்கிய பெருமை வாய்ந்தது, இத்தலம். எமபயத்தை நீக்கும்  மிகப்பழமையான சிவாலயம் இது. இங்கு பிரமாண்டமான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் சிறப்பானது தைப்பூசத் திருவிழா. அப்போது  தெப்போற்சவம் உட்பட 12 நாட்கள் விழா விமரிசையாக நடைபெறும். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காப்பாற்றினான். அதனால் வேணுவனம்  திருநெல்வேலியாயிற்று. இந்த சம்பவத்தை நான்காம் நாளில் நடத்திக் காட்டுவார்கள்.

எஸ்.ஆனந்த்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்