SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைரவர் பார்த்துக் கொல்வார்!

2015-11-04@ 10:58:08

சிறுகதை

பிரச்னை இவ்வளவு பெரிதாகப் போய்விடும் என்று சேகர் நினைக்கவில்லை. தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உயிர் பயம் பீடித்திருப்பதை அவனால் உணர முடிந்தது. கவுன்சிலர் ராஜேந்திரனைப் பற்றி புகார் செய்திருக்க வேண்டாமோ என்று நினைத்துக் கொண்டான். “பலதடவை தலை தலையா அடிச்சுகிட்டேன் கேட்டிங்களா..? இப்ப பாருங்க உங்களால எல்லாருக்கும் பிரச்னை, வெளியில தலை காட்டவே பயமாருக்கு. குழந்தைகள் ரொம்பவும் பயந்து கெடக்கறாங்க...” பவானி அழத்தொடங்கி விட்டாள். சேகர் பல வருடங்களாக தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறான். ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ததில் இருந்துதான் இவனுடைய சேவை ஆரம்பித்தது. காலையில் பை நிறைய இட்லியை எடுத்துக்கொண்டு பிச்சைக்காரர்களைத் தேடி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என்று அலைவான்.

ஆளுக்கு ஐந்து இட்லியும், ஒரு பாக்கெட் சாம்பாரும் கொடுத்துவிட்டு வருவான். அதுமட்டுமல்லாமல், சாலை வசதி கேட்டு நகராட்சித் தலைவருக்குக் கடிதம் எழுதுவது, குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை மனுவுடன் மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்ப்பது என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பான். ரேஷன் கடைக்குச் சென்று பொருட்கள் ஒழுங்காக விநியோகிக்கப்படுகிறதா என்று பார்ப்பான். தெரு விளக்குகள் எரியவில்லை என்றால் உடனே ஒரு பெட்டிஷன் எழுதி விடுவான். இதற்காக யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டான். இதனாலேயே இவனுடைய மனு என்றால் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், வார்டு கவுன்சிலர் செய்த ஊழல் குறித்து கலெக்டருக்கு கடிதம் எழுதியதுதான் பெரிய களேபரமாகிவிட்டது.

கவுன்சிலர் கொலை மிரட்டல் வரை போவான் என்று சேகர் நினைக்கவில்லை. நரிமணி ஆற்றுக்குப் பாலம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதியை கவுன்சிலர் ராஜேந்திரன் சுருட்டிக்கொண்டான் என்கிற தகவல் தெரிய வந்ததும் பதறிப் போனான் சேகர். உண்மையை தீர விசாரித்து, ஊழல் பற்றி விளக்கமாக ஒரு கடிதம் எழுதி கலெக்டருக்கு அனுப்பி விட்டான். விசாரணைக்கு அதிகாரிகள் வந்தபோது தான் விஷயமே தெரியவந்தது ராஜேந்திரனுக்கு. “என்ன தைரியம் இருந்தா என் மேலேயே கம்ப்ளைண்ட் பண்ணிருப்ப... உடனே புகார் மனுவை வாபஸ் வாங்கலன்னா அடுத்த மனு எழுதறத்துக்கு ஆள் இருக்க மாட்ட...” வீட்டுக்கே வந்து மிரட்டி விட்டுப் போனான் ராஜேந்திரன். அவனுடைய கோபத்தை எதிர் கொள்ள முடியாமல் தவித்தான் சேகர். அவன் யோசிப்பதற்கு அவகாசம் தேடுவதற்குள் அடியாட்கள் ஏற்பாடு செய்வதுவரை பிரச்னையைக் கொண்டு போய்விட்டான் ராஜேந்திரன்.

“அவனை மட்டுமில்ல, அவன் குடும்பத்தையே காலி பண்ணிடுவோம். அவன் இருக்கறவரை நமக்குப் பிரச்னைதான். மொத்தமா தூக்கிட்டு ஊரை விட்டுப் போய்ட்டாங்கன்னு கேஸை ஊத்தி மூடிடலாம்” - ரகசிய திட்டம் வகுத்துக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். சேகருக்கு கடவுளிடம் சரணடைவதை விட வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் பவானி ஒரு யோசனை சொன்னாள். “வாங்க, நம்ம சிங்காநல்லூர் ஜோசியர்கிட்ட போய் ஜாதகத்தை கொடுத்து பரிகாரம் ஏதாச்சும் இருக்கான்னு கேப்போம். எதிரிகள்கிட்ட இருந்து தப்பிக்க அவர் ஏதாவது யோசனை சொல்வாரு. வேற யாரையும் நம்ப வேணாம். போலீஸ்கிட்ட போனா, பிரச்னை இன்னும் பெருசாயிடும்.” மனைவி சொன்னது சரியாகவேபட்டது. ஜோதிடர் தன்னுடைய பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு சேகருடைய ஜாதகத்தை வாங்கி முழுமையாகப் பார்த்தார்.

“உங்க குடும்பத்தோட அதிதேவதை கால பைரவர். ஆனா, இதுவரைக்கும் பல கோயில் குளம்னு சுத்தின நீங்க பைரவரை மட்டும் கும்பிடல. ஏன் வீட்டுல கூட நீங்க ஒரு நாயை வளர்க்கலாம். கால பைரவருக்கு கஞ்சி கூட ஊத்தல. உங்க பிரச்னைக்கு அதுகூட ஒரு காரணமா இருக்கலாம்.
ஆனது ஆகட்டும். இதுக்கு அப்புறம் கவனமா இருங்க. கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கற கோயில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயிலுக்குப் போங்க. எமனுக்குக் கோயில் இருக்கற ஊர். அங்க இருக்கற லிங்கம் சுயம்புலிங்கம். எமன் தன்னுடைய தண்டத்தை தரையில அடிச்சு வெளியில கொண்டு வந்த லிங்கம். அந்த  ஊர்ல போய் சாமி கும்பிடறவங்களுக்கு அகால மரணமே வராதுங்கறது ஐதீகம். அந்தக் கோயில்ல இருக்கற கால பைரவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர்.

ஒரு தடவை போய் கும்பிட்டீங்கன்னா, பைரவர் உங்க கூடவே காலம் பூரா காவலுக்கு வருவார். “அப்புறம் இன்னொரு விஷயம். தரிசனம் முடிச்சிட்டுப்போற வழியில ஒரு நாய்க்குட்டி ஒண்ணு வாங்கிடுங்க. அந்த பைரவருக்கு தினமும் பால் ஊத்திட்டு வாங்க. உங்களுக்கும், உங்க வீட்டுக்கும் இனி அந்த பைரவர் காவல் நிப்பார். போய்ட்டு வாங்க” ஜோதிடர் கை எடுத்து கும்பிட்டு வழி அனுப்பி வைத்தார். தட்சணையோடு பழங்களும், இனிப்பும் சேர்த்து ஜோதிடருக்கு கொடுத்துவிட்டு வந்தான் சேகர். ஜோதிடர் சொன்ன மாதிரி, காலகாலேஸ்வரர் கோயிலுக்குப் போகும் அனுபவமே சிலிர்ப்பாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு அசைவிலும் தெய்வ சாந்நித்தியம் கூடவே வருவதை அவனால் உணர முடிந்தது. கோயிலில் பூஜை முடித்து விட்டு பைரவர் விபூதியை பெற்றுக் கொண்ட போது உடலில் தெய்வீகப் பரவசம் பரவியது.

வீட்டுக்குத் திரும்பியபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி தந்தது: ‘‘நல்ல வேளை, நீ ஊருக்குப் போயிட்டு இப்பதான் வர்ற. ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தீன்னா குடும்பத்தோட உங்களை காலி பண்ணிருப்பாங்க. இருவது பேர் ரெண்டு மூனு ஆட்டோல வந்தாங்க. உருட்டுக்கட்டை, கத்தி, கபடான்னு உங்க வீட்டைச் சுத்தி ரொம்ப நேரம் நின்னாங்க. யாரும் இல்லைன்னு தெரிஞ்சிகிட்டு போய்ட்டானுங்க.’’ போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது சேகருக்கு. கையிலிருந்த நாய்க்குட்டியை கொஞ்சினான். “பைரவா, இந்த பாவிகிட்ட இருந்து நீ தான் எங்களைக் காப்பாத்தணும்..” பைரவர் விபூதியைக் கரைத்து வீடு முழுக்கத் தெளித்தான். அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது. இந்த பைரவர் நிச்சயம் நம்மை காப்பாற்றுவார் என்று முழுமையாக நம்பினான்.

ஆனாலும், பவானிதான் அழுது அரற்றினாள். “வேணாங்க, இங்க இருக்கற நிலம், இடம் எல்லாத்தையும் வித்துட்டு, வேற ஊருக்குப் போய்டலாங்க. தினமும் செத்து, செத்துப் பிழைக்க வேண்டிருக்கு. புள்ளைங்களும் பாவம் யாரைப் பார்த்தாலும் மிரண்டு அழறாங்க.” “நீ ஒண்ணும் கவலைப்படாத பவானி. கால பைரவர் நம்மைக் கண்டிப்பா காப்பாத்துவார்,” நம்பிக்கையுடன் சொன்னான் சேகர். அப்படித்தான் நடந்தது. நீண்ட நாட்களாகவே ராஜேந்திரனிடமிருந்து எந்த மிரட்டலும் வரவில்லை. ஆச்சரியமாக இருந்தது சேகருக்கு. திடீரென்று ஒருநாள் பக்கத்து வீட்டு ரங்கனாதன் பதறியடித்து ஓடி வந்தான். “சேகர், உனக்கு சேதி தெரியுமா? உன்னை அடிக்க ஆள் அனுப்பினானே, கவுன்சிலர் ராஜேந்திரன், அவன் இன்னைக்கு காலைல செத்துட்டான்ப்பா...” நம்ப முடியாமல் பதற்றத்தோடு ரங்கனாதனைப் பார்த்தான் சேகர். ‘‘அட, என்னாச்சு?’’

‘‘தெரியலப்பா ஏதோ ‘ஹார்ட் அட்டாக்’னு சொல்றாங்கப்பா. நீயும் போய் மரியாதைக்கு ஒரு மாலையைப் போட்டுட்டு வந்துடு.” கவுன்சிலரின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரித்துப் பார்த்தான் சேகர். ‘‘அதெல்லாம் ஹார்ட் அட்டாக்கும் இல்லை, ஒண்ணும் இல்லை. அவன் பண்ணின பாவத்துக்கு பாதில போய்ட்டான், கொஞ்ச நஞ்சமாவா பண்ணினான்? எத்தனை பேரை ஆள் வச்சு அடிச்சிருக்கான், கொன்னு புதைச்சிருக்கான், எவ்வளவு கொள்ளை அடிச்சிருக்கான்!’’ ‘‘என்னதாங்க ஆச்சு அவருக்கு?’’ ‘‘பத்து நாளைக்கு முன்னாடி, ஆத்தங்கரையோரம் போதையில தள்ளாடியபடி போயிட்டிருந்திருக்கான். அங்க கெடந்த வெறி நாய் ஒன்ணு நல்லா கடிச்சி வச்சிடுச்சி.

வைத்தியத்துக்குக்கூட போகாம அலட்சியமா இருந்துருக்கான். ராபீஸ் தாக்கிடுச்சு. கடைசியா நாய் மாதிரி குரைச்சுகிட்டே கெடந்திருக்கான். ராபீஸ் தீவிரமாகி ஹைட்ரோபியான்னு ஒரு நோய் அட்டாக் ஆயிருக்கு. அதான் அவ்வளவு சீக்கிரம் போய்ட்டான். தண்ணியைப் பார்த்தாலே பயம் வர்ற நோய் அது. தண்ணி குடிக்காம நாக்கு வறண்டு செத்துட்டான்...’’ கடவுள் ஒவ்வொரு விதமா அவதாரம் எடுத்து ஒவ்வொரு அசுரனையும் வதம் பண்றார். பைரவரா அவதாரம் எடுத்து இவனை அழிச்சிருக்கார்! மனசுக்குள் சொல்லிக்கொண்டான் சேகர். கால பைரவர் கரங்களில் தான் பத்திரமாக இருப்பதாக உணர்ந்தான் சேகர்.

ஆதலையூர் சூரியகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்